ஊத்துக்கோட்டை அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் மரணம்


ஊத்துக்கோட்டை அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் மரணம்
x
தினத்தந்தி 6 Jun 2018 5:00 AM IST (Updated: 5 Jun 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் மரணம் அடைந்தார். பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தியதால் 50 பயணிகள் உயிர் தப்பினர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 45). இவர் ஆந்திர மாநில போக்குவரத்து துறையில் 15 ஆண்டுகளாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராணி (35) என்ற மனைவியும் விஷால் (9), நிவாஸ் (7) என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அருணாசலம் திருமலையில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு பஸ்சை ஓட்டி சென்றார். இரவு மீண்டும் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமலைக்கு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். பஸ் செங்குன்றத்தை அடைந்தபோது அருணாசலத்துக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே அவர் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்தி அங்குள்ள மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். பின்னர் பஸ் புறப்பட்டது. இரவு 7 மணிக்கு பஸ் ஊத்துக்கோட்டையில் சிறிது நேரம் நின்று விட்டு திருமலைக்கு புறப்பட்டது.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பிச்சாட்டூரில் அருணாசலத்துக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கு சாலையோரமாக பஸ்சை நிறுத்திய அருணாசலம் அங்குள்ள மருந்து கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டார். அதன் பின்னர் சுமார் 100 மீட்டர் சென்றதும் பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு ஸ்டீயரிங் மீது சாய்ந்தார். அங்கேயே அவர் இறந்து விட்டதும் தெரியவந்தது. இறக்கும் நேரத்தில் தங்களை காப்பாற்றிய டிரைவரை பார்த்து பயணிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

இது குறித்து பிச்சாட்டூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். பின்னர் மாற்று டிரைவர் மூலம் பயணிகள் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story