மங்கலம் அருகே குடிநீர் முறையாக வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
மங்கலம் அருகே சின்னப்புத்தூரில் குடிநீர் முறையாக வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்கலம்,
மங்கலம் அருகே உள்ள சின்னப்புத்தூர் பகுதியில் 2000–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் விசைத்தறி மற்றும் கூலித்தொழிலாளர்கள் ஆவார்கள். இந்த பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே ஊராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் அன்றாட தேவைகளுக்கு சின்னப்புத்தூர் அருகே உள்ள மலைக்கோவில், வேலாயுதம்பாளையம் பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள குடிநீர் குழாய்களிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் இருந்து தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த குடிநீரும் கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுக்க சென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு இருப்பதில்லை.
எனவே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் நேற்றுகாலை சின்னப்புத்தூர் பஸ் நிலையம் அருகே காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்துச்சாமி, சரோஜினி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் வராமல் கலைந்து செல்லமாட்டோம் என பொதுமக்கள் கூறினர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலந்து சென்றனர். இதற்கிடையே சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டன.