பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:15 AM IST (Updated: 6 Jun 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர், பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு நியமித்துள்ள பணியாளர் சீர்திருத்த குழுவை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்பூன்னிசா, செல்வமணி, தியாகராஜன், வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சவீதா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் தயாளன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சின்னதுரை நன்றி கூறினார்.

இதே போல் வேப்பூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க குன்னம் வட்ட செயலாளர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், செந்தில், ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பெரம்பலூரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் இமயவரம்பன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஆளவந்தார், துணை தலைவர் குமரிஆனந்தன், வட்ட இணை செயலாளர் மருதராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story