கைது நடவடிக்கைக்கு கண்டனம்: மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மீது தேவையில்லாமல் போலீஸ் மூலம் கைது நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்தும், தேவையற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், சிவகங்கையில் உள்ள கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் பணிகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த பொதுச் செயலாளர் கணேசன் பேசும்போது, மாவட்ட கூட்டுறவு துறை சமீபகாலமாக மத்திய வங்கி பணியாளர்கள் மீது வேண்டுமென்றே வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் இழப்புகளுக்கு அந்தந்த சங்கமே பொறுப்பாகும். இதற்கு மத்திய வங்கி ஊழியர்களும், கள ஆய்வாளர்களும் நேரடி பொறுப்பாகமாட்டார்கள். ஆனால் வீண் பழிசுமத்துவதற்காக மத்திய வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
ஆர்ப்பாட்ட முடிவில் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.