மொபட் மீது லாரி மோதல்; சாலை பணியாளர் பலி பொதுமக்கள் மறியல்


மொபட் மீது லாரி மோதல்; சாலை பணியாளர் பலி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:30 AM IST (Updated: 6 Jun 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

காரையூர் அருகே மொபட் மீது லாரி மோதியதில் சாலை பணியாளர் பரிதாபமாக இறந்தார். லாரி டிரைவர் சம்பவ இடத்துக்கு வர வேண்டும் என்று கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சித்தூரை சேர்ந்தவர் சின்னையா (வயது 42). இவர் நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று ஆத்தங்காடு பகுதியில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது சக பணியாளர்களுக்கு சாப்பாடு வாங்குவதற்காக மொபட்டில் புதுக்கோட்டை சாலையில் உள்ள அரசங்குடி சென்று விட்டு சாப்பாடு வாங்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

நெறிஞ்சிக்குடி விளக்கு பகுதிஅருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக கிரஷர் மண் ஏற்றி சென்ற லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில், சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு சின்னையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே லாரி டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு, காரையூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சித்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நெறிஞ்சிக்குடி விளக்கு பகுதியில் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது. தற்போது நடைபெற்ற விபத்திற்கு காரணமான லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் நெறிஞ்சிக்குடி விளக்கில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன், அன்னவாசல் இன்ஸ்பெக்டர் மங்கையக்கரசி, காரையூர் சப்-இனஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் சின்னையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் குமரன் (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story