சத்தியமங்கலம் அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற அதிரடிப்படை வீரர் சாவு


சத்தியமங்கலம் அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற அதிரடிப்படை வீரர் சாவு
x
தினத்தந்தி 6 Jun 2018 3:30 AM IST (Updated: 6 Jun 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அதிரடிப்படை வீரர் பரிதாபமாக இறந்தார்.

சத்தியமங்கலம்,

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 36). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிரடிப்படை போலீசாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கவிதா (30). இவர் கோவை அருகே உத்தண்டியூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கூட்டத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கார்த்திகேயன் நேற்று முன்தினம் சத்தியமங்கலம் கடை வீதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் சத்தியமங்கலத்துக்கு வந்துகொண்டு இருந்தார். சத்தியமங்கலம் அருகே மேட்டுப்பாளையம் ரோட்டில் வந்த போது முன்னால் கோணமூலை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கார்த்திகேயன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கண்ணனின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் கார்த்திகேயன் மற்றும் கண்ணன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் கார்த்திகேயன் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திகேயன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story