காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணிக்கட்டி ஆர்ப்பாட்டம்


காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணிக்கட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jun 2018 4:30 AM IST (Updated: 6 Jun 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணிக்கட்டி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கண்களில் கருப்பு துணிக்கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் புகழேந்தி, தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் அந்துவன்சேரல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சங்கத்தை சேர்ந்த ராணி, இளவரசன், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்பட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.

ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக் கொடையாக அமைப்பாளர் களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும்.

பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தி அரசாணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story