கணவர் கண்முன்னே பெண் கற்பழிப்பு: 5 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை


கணவர் கண்முன்னே பெண் கற்பழிப்பு: 5 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 6 Jun 2018 4:45 AM IST (Updated: 6 Jun 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே கணவர் கண்முன்னே பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் 5 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் 33 வயது நிரம்பிய பெண் ஒருவர் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கிழங்கு ஆலையில் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி வேலைக்கு சென்ற கணவர் நீண்டநேரம் வீடு திரும்பாததால், அவரை தேடி ஆலைக்கு அந்த பெண் சென்றார்.

பின்னர் அவர் கணவரை அழைத்து கொண்டு இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அவர்கள் இருவரும் போதகாபட்டி சுடுகாடு அருகில் சென்றபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. திடீரென அந்த கும்பல் கணவரை தாக்கிவிட்டு, அவரது கண்முன்னே அப்பெண்ணை அருகில் இருந்த முட்புதரில் வைத்து கற்பழித்தது.

இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நாமகிரிப்பேட்டையை சேர்ந்த ஜெயசூர்யா (வயது 22), கணேஷ்குமார் (25), அஜித் (21), பிர்லா (25), ராஜேஷ் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயசூர்யா உள்ளிட்ட 5 வாலிபர்களுக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார். இதை கேட்டதும் கோர்ட்டு வளாகத்தில் திரண்டு இருந்த அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இவர்களில் ஜெயசூர்யாவுக்கு ரூ.16 ஆயிரமும், மீதமுள்ள 4 பேருக்கும் தலா ரூ.4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

Next Story