நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று மாலை விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசி மனு கொடுத்தனர்.
குறிப்பாக 3 தாலுகாக்களிலும் உள்ள ஏரி, குளம், வரத்து வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பட்டா மாற்றம், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவை கோரி ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். உடனுக்குடன் பட்டா மாற்றத்திற்கான உத்தரவையும், வீட்டுமனைப்பட்டாவையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை கேட்டறிந்த கோட்டாட்சியர் சரஸ்வதி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கூட்டத்தில் தாசில்தார்கள் சுந்தர்ராஜன், வேல்முருகன், ஜோதிவேல், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ், மண்டல துணை தாசில்தார்கள் பாண்டியன், வெங்கடசுப்பிரமணியன், கோவர்த்தனன், வருவாய் ஆய்வாளர்கள் வெங்கடபதி, அகமதுஅலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story