16–வது நாளாக வேலைநிறுத்தம்: கிராமிய அஞ்சல்துறை ஊழியர்கள் பாடை கட்டி நூதன போராட்டம்


16–வது நாளாக வேலைநிறுத்தம்: கிராமிய அஞ்சல்துறை ஊழியர்கள் பாடை கட்டி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2018 4:30 AM IST (Updated: 7 Jun 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கிராமிய அஞ்சல்துறை ஊழியர்கள் 16–வது நாளாக நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தபால் துறைக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,


நாடு முழுவதும் கிராமிய அஞ்சல்துறை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கமலேஷ் சந்திரா குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கடந்த 22–ந் தேதி முதல் இந்த போராட்டம் நடக்கிறது. நேற்று 16–வது நாளாக போராட்டம் நீடித்தது. நாகர்கோவில் தலைமை தபால்நிலையத்தில் நேற்று அஞ்சலக ஊழியர்கள் தபால் துறைக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். பொம்மை போன்ற உருவத்தை ஓலைப்பாயில் படுக்க வைத்து, மலர் மாலைகள் அணிவித்து, ரூபாய் நோட்டுகள், சில்லறை காசுகள் வைத்து கோரிக்கைகளை ஒப்பாரி வடிவில் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதற்கு கோட்ட துணை தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். போராட்டத்துக்கு முன்னாள் எம்.பி.பெல்லார்மின் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

மேலும் கோட்ட செயலாளர் சுபாஷ், அமைப்பு செயலாளர் ரதீஸ் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.


போராட்டம் குறித்து கோட்ட தலைவர் இஸ்மாயில் கூறியதாவது:–

நாடுமுழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இன்று(அதாவது நேற்று) கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதில், சுமுக தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவு சாதகமாக இல்லாதபட்சத்தில் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைப்படி போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

குமரி மாவட்டத்தில், கிராமபுறங்களில் 186 கிராமிய அஞ்சலகங்கள் உள்ளன. இவை அனைத்திலும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தபால் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பதிவு தபால்களான பாஸ்போர்ட், பான்கார்டு, கோர்ட்டு தபால்கள் போன்ற 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்களை கிராமங்களுக்கு கொண்டு செல்லமுடியாமல் தேக்கமடைந்து கிடக்கிறது. இதனால் தபால் துறைக்கு ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கிராமிய அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story