அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகம் முன்பு திருக்கோவில் பணியாளர்கள் போராட்டம்
மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகம் முன்பு திருக்கோவில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை,
தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மூன்று கட்ட அறப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதில் 7–வது ஊதியக்குழு ஊதியம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாரபட்சம் இன்றி அனைவருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களுக்கு பணிநிரந்தரம். ஊதிய முரண்பாடுகளை அகற்றி அரசாணைப்படி சமவேலைக்கு சமஊதியம்.
ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள கோவில் பணியாளர்களுக்கு முதுநிலை திருக்கோவில் பணியாளர்களுக்கான ஊதியம். ஓய்வு பெற்ற திருக்கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் என நீண்டநாள் நிலுவையில் உள்ள கோரிக்கை உள்பட 23 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.
இதனை அரசு நிறைவேற்றாவிட்டால் மூன்று கட்ட அறப்போராட்டத்தை நடத்த திருக்கோவில் பணியாளர்கள் முடிவு செய்தனர். முதல் கட்ட போராட்டம் ஜூன் 6–ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல அலுவலகம் முன்பும், 2–ம் கட்டமாக வருகிற 21–ந் தேதி சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம் முன்பும், 3–ம் கட்டமாக வருகிற 27–ந்தேதி முதல் தொடர் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முதல் கட்ட போராட்டம் நேற்று காலை மதுரை எல்லீஸ் நகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை கமிஷனர் அலுவலகம் முன்பு நடந்தது. அதில் மீனாட்சி அம்மன் கோவில் பணியாளரும் மாநில தலைவருமான ஷாஜிராவ் தலைமை தாங்கினார். முருகேசன்(நேதாஜி ரோடு தண்டாயுதபாணி கோவில்) வரவேற்றார். சேது (அழகர்கோவில்), முருகன்(மீனாட்சி அம்மன் கோவில்), செந்தில் அரசு (கூடலழகர் பெருமாள் கோவில்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை, பழனி, தேனி, திண்டுக்கல் என பல்வேறு ஊர்களில் உள்ள திருக்கோவில்களில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் முடிவில் அவர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை இணை கமிஷனர் பச்சையப்பனிடம் கொடுத்தனர். அவர் அந்த மனுவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் 200–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அரசு உரிய முடிவை எடுக்காவிட்டால் விரைவில் 2–ம் கட்ட போராட்டம் நடைபெறும் என்று திருக்கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.