ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் சென்னை விமான நிலையத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை, விமான நிலைய இயக்குனர் பேட்டி
சென்னை விமான நிலையத்தில் ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி கூறினார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையத்தின் சார்பில் ‘உலக சுற்றுச்சூழல் தின விழா’ நேற்று மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையத்துக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் தென் மண்டல ஆணையக அதிகாரி ஸ்ரீகுமார், சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி, வனத்துறை அதிகாரி ரவீந்திரநாத் உபதாய்யா, மத்திய தொழிற்படை போலீஸ் அதிகாரி பொன்னியின் செல்வன் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது உள்பட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பல்வேறு தீமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் 21 தினங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் பற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னர் விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. நம்முடைய வாழ்க்கையில் பிளாஸ்டிக்கை எப்படி தவிர்ப்பது என ஆராயப்பட்டது. 21 தினங்கள் ஒரு பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தால் அது நிரந்தர பழக்கமாக மாறிவிடும். எனவே 21 தினங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது தொடர்பாக விழாவில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விமான நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக தவிர்ப்பது பற்றியும், முதற்கட்டமாக மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம் என்றும் இந்திய விமான நிலைய ஆணையக தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பல்வேறு விமான நிறுவனங்கள் மற்றும் பல தரப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. பிளாஸ்டிக் ஒழிப்புக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும். வருகிற ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து, சென்னை விமானநிலையத்தை பிளாஸ்டிக் இல்லா விமான நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.