கும்பகோணம் சிற்ப கூடத்தில் திடீர் தீ விபத்து ரூ. 1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


கும்பகோணம் சிற்ப கூடத்தில் திடீர் தீ விபத்து ரூ. 1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 8 Jun 2018 4:30 AM IST (Updated: 7 Jun 2018 11:16 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் உள்ள ஒரு சிற்ப கூடத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

கும்பகோணம்,


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் ரோடு, செல்வசாரங்கபாணி தெருவில் மீனாட்சி சுந்தரம் பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான சிற்ப கூடம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஐம்பொன் மற்றும் உலோகத்தினாலான சிலைகள் செய்யும் பணி, குத்துவிளக்கு மெருகேற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை திடீரென இந்த சிற்ப கூடத்தில் இருந்து புகை வந்தது. இதனையடுத்து அந்த பகுதியினர் அங்கு சென்று பார்ப்பதற்குள் அந்த சிற்ப கூடத்தில் இருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.


இது குறித்து அந்த பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

மின் கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் இன்வெர்ட்டர், ஒயர்கள் மற்றும் ரசாயன கலவைகள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அந்தபகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. மேலும் சிற்ப வேலைக்கு தேவையான ரசாயன பொருட்கள் இருந்த பகுதிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதோடு குடியிருப்புகள் அதிகம் உள்ள இந்த இடத்தில் பெரும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம் அடைந்தது.

இந்த தீவிபத்து குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story