பெண் டாக்டர் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது


பெண் டாக்டர் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2018 11:00 PM GMT (Updated: 7 Jun 2018 6:43 PM GMT)

திருவண்ணாமலையில் மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்த பெண் டாக்டர் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தை நல சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார் (வயது 30) என்பவர் தனது மனைவியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அவர், திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் பணியாற்றி வருகிறார்.

விஜயக்குமார் தனது மனைவியுடன் மகப்பேறு பிரிவுக்கு சென்று, தனக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதாகவும், தற்போது தனது மனைவி 3-வதாக கர்ப்பம் அடைந்து உள்ளார். எனவே, எனது மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அப்போது பணியில் இருந்த டாக்டர் பவானி, கருக்கலைப்பு செய்த பின் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து விஜயக்குமார், டாக்டர் பவானியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் விஜயக்குமார் டாக்டரை செல்போனில் புகைப்படம் எடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்று உள்ளார்.

இதையடுத்து விஜயக்குமார், டாக்டரின் புகைப்படத்தை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை பதிவு செய்து உள்ளார். மேலும் இதற்கு ஏராளமானோர் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த டாக்டர் பவானி, முகநூலில் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக பவானி திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் விஜயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நேற்று காலை புறநோயாளிகள் பிரிவுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். காலை சுமார் 10 மணிவரை டாக்டர்கள் வராததால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

இதனால் அவதிப்பட்ட சிலர், புறநோயாளிகள் பிரிவு வளாகம் முன்பு வந்து நின்று டாக்டர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர் 10 மணிக்கு மேல் மருத்துவமனை முதுநிலை டாக்டர்கள் மூலம் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனையில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களிடம் மருத்துவக் கல்லூரியின் டீன் நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், பெண் டாக்டரின் புகைப் படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் மருத்துவமனைக்கு வந்து, அனைத்து டாக்டர்களின் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் முகநூலில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்து தெரிவித்தவர்களில் சுமார் 10 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பின்னர் டீன் கூறுகையில், சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த சம்பவம் குறித்து நான் முழு முயற்சி எடுத்து, கருத்து தெரிவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இருப்பினும் டாக்டர்கள், கருத்து தெரிவித்த 10 பேரை கைது செய்தால் தான் நாங்கள் பணிக்கு திரும்புவோம் என்றனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சைப் பிரிவு முன்பு பந்தல் அமைத்து தரையில் அமர்ந்து தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரியின் டீன் நடராஜன் கூறுகையில், டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் முதுநிலை டாக்டர்களை கொண்டு புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நோயாளிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 2 ஆயிரத்து 100 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் மற்றும் உதவி டாக்டர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயிற்சி டாக்டர்கள் வகுப்புகளுக்கு வராமலும், வார்டுகளுக்கு செல்லாமலும் இருந்தால் அவர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story