3 மாதத்திற்கு முன்பு போடப்பட்ட பேரளி-பில்வாடி தார்ச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதி


3 மாதத்திற்கு முன்பு போடப்பட்ட பேரளி-பில்வாடி தார்ச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதி
x
தினத்தந்தி 7 Jun 2018 10:30 PM GMT (Updated: 7 Jun 2018 7:02 PM GMT)

3 மாதத்திற்கு முன்பு போடப்பட்ட பேரளி- பில்வாடி தார்ச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பேரளி கிராமம் முதல் பில்வாடி கிராமம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை கடந்த 10 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்தது. பின்னர் ரூ.92 லட்சம் மதிப்பில் 4 கிலோ மீட்டர் புதிதாக தார்ச்சாலையும், ரூ.14 லட்சம் செலவில் 2 பாலங்களும் வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி பேரளி மற்றும் பில்வாடி கிராம இளைஞர்கள் புதிதாக அமைக்கப்படும் தார்ச்சாலை தரமற்றதாக உள்ளதால், சாலை பணியை நிறுத்த கோரி கோரிக்கை விடுத்தனர். பணியின் மேற்பார்வையாளரும், திருச்சி வன கோட்ட பொறியியல் பிரிவு வனவருமான சியாம் சுந்தர் அப்பகுதி கிராம இளைஞர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து, முதலில் கிணற்று கல் மற்றும் மண்ணை கொட்டியும், அதற்கு மேல் தூள்மண் கொட்டப்படும். மேலும் ஜல்லி கலவை கொட்டப்படும். தார்ச்சாலை தரமான சாலையாக தான் அமைக்கப்படுகிறது. உங்களுக்கு சந்தேகம் இருப்பின் நீங்களும் அருகில் இருந்து பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி பேரளி பில்வாடி தார்ச்சாலை முழுமையாக அமைக்கப்பட்டது.

புதிதாக போடப்பட்ட பேரளி-பில்வாடி கிராம தார்ச்சாலை தற்போது 3 மாதம் கடந்த நிலையில், பல இடங்களில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை பெயர்ந்து, அடியில் உள்ள ஜல்லிக்கற்கள் தனியாகவும் பிரிந்து சாலை சேதம் அடைந்து விட்டது. இதனால் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. மேலும் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். போராட்டம் நடத்தப்படும்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் பேரளி, பில்வாடி கிராம இளைஞர்கள் ஒதுக்கப்பட்ட நிதிக்கு சாலை போட்டுள்ளார்களா? அல்லது ஊழல் ஏதேனும் நடைபெற்றுள்ளதா?, போடப்பட்ட சாலையை அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தார்களா, ஒப்பந்ததாரர் மீது அபராதம் விதித்து அந்த தொகையை வசூல் செய்து உடனடியாக தார்ச்சாலையை மறு சீரமைப்பு செய்து தரமான உறுதியான தார்ச்சாலை அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். அவ்வாறு உடனடியாக சாலையை சீரமைக்காமல் கால தாமதம் ஏற்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.


Next Story