இட்டமொழி அருகே பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் கழிப்பறையை சுத்தம் செய்ய மாணவிகளை கட்டாயப்படுத்துவதாக புகார்


இட்டமொழி அருகே பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் கழிப்பறையை சுத்தம் செய்ய மாணவிகளை கட்டாயப்படுத்துவதாக புகார்
x
தினத்தந்தி 7 Jun 2018 9:00 PM GMT (Updated: 7 Jun 2018 7:56 PM GMT)

இட்டமொழி அருகே பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இட்டமொழி, 

இட்டமொழி அருகே பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கழிப்பறையை சுத்தம் செய்ய மாணவிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக புகார் கூறினர்.

அரசு பள்ளிக்கூடம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா காரியாண்டியில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி உள்ளது. இட்டமொழி அருகே உள்ள இந்த பள்ளியில் சங்கரி என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மேலும் 2 உதவி ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 65 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலையில் அந்த பகுதி மக்கள் பள்ளியின் புரவலர் பாண்டு ரெங்கன் பண்ணையார் தலைமையில் பள்ளிக்கூடம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். மாணவ- மாணவிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது தலைமை ஆசிரியை மீது பல்வேறு புகார்களை கூறினர். தகவல் அறிந்த நாங்குநேரி உதவி தொடக்க கல்வி அலுவலர் செபஸ்தியாயி, வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெர்ஜின் சேவியோ, சப்-இன்ஸ்பெக்டர் பெர்லின்பால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள் சார்பில் கல்வி அதிகாரியிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பள்ளிக்கூட கழிப்பறையை சுத்தம் செய்ய மாணவிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கிளாஸ்’ நடத்தப்படுவது இல்லை. பள்ளியின் மாணவர் சேர்க்கையில் பள்ளி தலைமை ஆசிரியை ஈடுபடுவது இல்லை. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியையைதான் பொறுப்பு. எனவே அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பரபரப்பு

மனுவை பெற்றுக்கொண்ட கல்வி அதிகாரி இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பள்ளிக்கூட தலைமை ஆசிரியையை கண்டித்து பொதுமக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story