பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவ-மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்


பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவ-மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 8 Jun 2018 3:45 AM IST (Updated: 8 Jun 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின பள்ளி விடுதிகள் மாணவர்களுக்கு 21, மாணவிகளுக்கு 12 என 33 விடுதிகள் இயங்குகிறது. அதேபோல் கல்லூரி, பாலிடெக்னிக், தொழிற்கல்வி மாணவர்களுக்கு 6, மாணவிகளுக்கு 6 என 12 விடுதிகள் உள்ளன.

பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், தொழிற்கல்வி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு, தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். மாணவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு தூரம் விதிவிலக்கு.

பள்ளி மாணவர்களுக்கு 20-ந் தேதி கடைசிநாள்

தகுதியுடைய மாணவ- மாணவிகள் அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பள்ளி விடுதிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20-ந் தேதிக்குள்ளாகவும், கல்லூரி விடுதிகளில் சேர உள்ள மாணவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்கள் விடுதியில் சேரும்போது சாதிசான்றிதழ் மற்றும் பெற்றோர் ஆண்டு வருமான சான்றிதழ் நகல் அளிக்க வேண்டும். விடுதிகளில் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

Next Story