கோவையில் ரூ.22 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு 3 பேர் கைது


கோவையில் ரூ.22 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2018 11:15 PM GMT (Updated: 7 Jun 2018 9:18 PM GMT)

கோவையில் ரூ.22 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓமலூர்,

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் கோ பிடல் (வயது 45). இவர், கன்னியாகுமரியை சேர்ந்த கரிகாலன் (40) என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதற்காக பாப்பநாயக்கன்பாளையத்தில் அலுவலகமும் வைத்திருந்தனர். இந்த தொழிலுக்காக கரிகாலன் ரூ.15 லட்சம் மற்றும் 36 பவுன் நகை ஆகியவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நகை- பணத்துக்கு அவர் வட்டியும் வாங்கி வந்தார்.

இதற்கிடையே, ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்ததால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே இந்த தொழிலில் இருந்து தான் விலகி விடுவதாகவும், தான் கொடுத்த நகை-பணத்துக்காக ரூ.22 லட்சத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கரிகாலன் அவரிடம் கேட்டார். அதற்கு ஜான் கோ பிடல் கொடுப்பதாக கூறினார்.

தனது சொந்த ஊருக்கு சென்ற கரிகாலன், பலமுறை ஜான் கோ பிடலுக்கு தொடர்பு கொண்டு நகை-பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர், விரைவில் கொடுத்து விடுவதாக கூறினாரே தவிர நகை, பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கரிகாலன் நேற்று மதியம் 1½ மணியளவில் தனது நண்பர்கள் 9 பேருடன் 2 காரில் கோவை வந்தார். அவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்த ஜான் கோ பிடலிடம் ரூ.22 லட்சம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கரிகாலன், கத்தி முனையில் ஜான் கோ பிடலை காருக்குள் தூக்கிப் போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் தனது நண்பர்களுடன் கடத்தி சென்றார்.

இந்த சம்பவம் குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 கார்களில் தப்பி சென்ற கரிகாலன் மற்றும் அவருடன் வந்த கும்பலை வலைவீசி தேடி வந்தனர். மேலும் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கொங்குப்பட்டியில் கார் இருப்பதாக ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கருக்கு தகவல் தெரிவித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று இரவு சுமார் 9 மணியளவில் அங்கு சென்றனர்.

அப்போது வேறு காரில் ஜான் கோ பிடலை மாற்றி கொண்டு அந்த கும்பல் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து தீவட்டிப்பட்டி வாகன சோதனை நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு விரைந்து சென்று காரை பிடித்து கடத்தப்பட்ட ஜான் கோ பிடலை போலீசார் மீட்டனர்.

மேலும் அவரை கடத்திய தர்மபுரி மாவட்டம் பிடமனேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் (36), ஈரோடு மாவட்டம் கருக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (37), சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (25) ஆகிய 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த ஒரு கத்தி, கொடுவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த தகவல் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதின் பேரில் அவர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் மீட்கப்பட்ட ஜான் கோ பிடல் மற்றும் கைதானவர்களை ஓமலூர் போலீசார் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கோவையில் பட்டப்பகலில் பணத்துக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story