சென்னபசப்பா சிவள்ளி எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி வழங்க கோரி போராட்டம் உப்பள்ளியில், ஆதரவாளர்கள் நடத்தினர்


சென்னபசப்பா சிவள்ளி எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி வழங்க கோரி போராட்டம் உப்பள்ளியில், ஆதரவாளர்கள் நடத்தினர்
x
தினத்தந்தி 7 Jun 2018 10:45 PM GMT (Updated: 7 Jun 2018 9:53 PM GMT)

குந்துகோல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சென்னபசப்பா சிவள்ளிக்கு, மந்திரி பதவி வழங்க கோரி அவரது ஆதரவாளர்கள் நேற்று உப்பள்ளியில் போராட்டம் நடத்தினர்.

உப்பள்ளி,

குந்துகோல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சென்னபசப்பா சிவள்ளிக்கு, மந்திரி பதவி வழங்க கோரி அவரது ஆதரவாளர்கள் நேற்று உப்பள்ளியில் போராட்டம் நடத்தினர்.

மந்திரிசபை விரிவாக்கம்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளன. முதல்–மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்–மந்திரியாக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரும் கடந்த மாதம்(மே) 23–ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். ஆனால் 2 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலரும் தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் தலைவர்களிடம் வலியுறுத்தி வந்ததால் மந்திரிசபை மட்டும் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் காங்கிரசை சேர்ந்த 15 பேர், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 10 பேர் என 25 பேர் புதிய மந்திரிகளாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில மூத்த தலைவர்களுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆதரவாளர்கள் போராட்டம்

இந்த நிலையில் தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னபசப்பா சிவள்ளி எம்.எல்.ஏ.வும், தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து இருந்தார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர் கட்சியின் மேலிடம் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.

இந்த நிலையில் சென்னபசப்பா சிவள்ளி எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி வழங்க கோரி, அவரது ஆதரவாளர்கள் நேற்று உப்பள்ளி டவுன் கதக் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னபசப்பா சிவள்ளி எம்.எல்.ஏ.வுக்கு உடனடியாக மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கூறி கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story