ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கூட சத்துணவு கூடத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூட சத்துணவு கூடத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார். மேலும், பொட்டல உணவுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரி டாக்டர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக்கூட மாணவர்கள் விரும்பி சாப்பிடும் பொட்டல உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள், பொட்டல உணவுகளில் தரம் கண்டுபிடிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அதன்படி நேற்று ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்துக்கு நியமன அதிகாரி டாக்டர் கலைவாணி மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரி பூபாலன் ஆகியோர் சென்றனர். அங்குள்ள சத்துணவு கூடத்துக்கு சென்ற அவர்கள், உணவு சமைக்கும் பகுதி, உணவுப்பொருட்கள், சமைக்கப்பட்ட உணவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதுபோல் அங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய சமையல் கூடத்தையும் டாக்டர் கலைவாணி ஆய்வு செய்தார்.
இந்த சத்துணவு கூடங்களில் தரமான உணவு தயாரிப்பதற்கான தரச்சான்றிதழையும் அவர் அப்போது வழங்கினார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பொட்டல உணவு பொருட்களை தரம் கண்டறிய செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து டாக்டர் கலைவாணி எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி, அங்கன்வாடி மைய பொறுப்பாளர் பூவரசி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் டாக்டர் கலைவாணி கூறியதாவது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் சமைக்கப்படும் உணவுகள் தரமானவை என்று உணவு பாதுகாப்பு துறையிடம் தரச்சான்று பெற வேண்டும். அதன்படி மாவட்டத்தில் 98 சதவீத சத்துணவு கூடங்கள் ஆய்வு செய்யப்பட்டு தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது. இதுபோல் மாணவ-மாணவிகள் துரித உணவுகள், பொட்டல உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story