தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - தொல்.திருமாவளவன் கோரிக்கை


தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - தொல்.திருமாவளவன் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2018 4:45 AM IST (Updated: 9 Jun 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் கன கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

கடலூர்,

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில நிர்வாககுழு உறுப்பினர் திருமால்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசியதாவது:–

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது.

மற்ற கட்சி தலைவர்களை தூத்துக்குடிக்கு செல்ல அனுமதித்த அரசு வேல்முருகனை மட்டும் அனுமதிக்காதது ஏன்? கைதாவதற்கோ, சிறை செல்வதற்கோ அவர் அஞ்சக்கூடியவர் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து வந்த பிறகோ அல்லது வேறு எங்காவது வழியில் செல்லும்போதோ கைது செய்து இருக்கலாம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஏதேச்சையாக நடந்த நிகழ்வு அல்ல. போராட்டத்தை ஒடுக்கவேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே பேசி முடிவெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைத்துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள். மஞ்சள், நீல நிற பனியன் அணிந்து துப்பாக்கியால் சுட்டவர்கள் யார்? அவர்கள் உண்மையிலேயே காவல்துறையை சோந்தவர்களா? அல்லது சமூக விரோதிகளா, ஏன் அவர்கள் அடையாளம் காட்டப்படவில்லை.

ஊழல்வாதிகள், சாதிய, மதவாதிகள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்கள், விபசாரத்தில் ஈடுபடுவோர் ஆகியோரைத்தான் சமூக விரோதிகள் என்று சொல்வார்கள். ஆனால் இங்கே போராட்டம் நடத்திய மக்களை சமூகவிரோதிகள் என்கிறார்கள். நண்பர் ரஜினிகாந்தும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். அவரும் அரசியலுக்கு வந்து போராட்டம் நடத்தும்போது அவரது ரசிகர்கள் மீது குண்டடி பட்டால் போலீசுக்கு எதிராக குரல் எழுப்பும் காலமும் வரும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாக, எடுபிடியாக பிரதமர் மோடி இருக்கிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுத்தால்தான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். நடிகர் எஸ்.வி.சேகருக்கு எந்த கோர்ட்டும் முன்ஜாமீன் வழங்காத நிலையில் அவரை தமிழக அரசு கைது செய்யவில்லை. ஆனால் வேல்முருகனை கைது செய்கிறார்கள். மத்திய அரசின் எடுபிடி நிலையில்தான் மாநில அரசு இருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

போராட்டத்தில் ஈடுபடக்கூடிய தலைவர்களை கைது செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். இதற்காக தலைவர்களை விடுதலை செய்ய சொல்லி தற்கொலை என்ற ஆயுதத்தை நீங்கள் கையில் எடுக்க கூடாது என உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது தொடுக்கப்பட்டுள்ள அடக்கு முறையை விடுதலைசிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:–

தூத்துக்குடியில் 3 தாசில்தார்கள் உத்தரவின் பேரில் துப்பாக்கி சூடு நடக்கவில்லை. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில்தான் துப்பாக்கி சூடு நடந்தது. நான், தொல் திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் தூத்துக்குடிக்கு சென்று வந்தோம். ஆனால் தூத்துக்குடிக்கு செல்வதற்கு முன்னதாகவே விமான நிலையத்தில் வைத்து வேறு ஏதோ ஒரு வழக்கு சம்பந்தமாக வேல்முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த ஆட்சியில் ஜனநாயகம் என்பது மறுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கு எதிராக, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன, அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழங்கி இருக்கும் உரிமையை யாரும் பறிக்க முடியாது. அடக்கு முறை மூலம் எங்களை அடக்கவோ, ஒடுக்கவோ முடியாது. எனவே அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.பி.விஸ்வநாதன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஆரூண்ரஷீத், மீனவர் விடுதலை வேங்கை நிறுவன அமைப்பாளர் மங்கையர் செல்வன், மீனவர் வாழ்வுரிமை இயக்கம் ஏகாம்பரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story