பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 வழங்கக்கோரி குன்னூர் தேயிலை வாரிய அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம்


பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 வழங்கக்கோரி குன்னூர் தேயிலை வாரிய அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2018 10:15 PM GMT (Updated: 8 Jun 2018 7:25 PM GMT)

பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 வழங்கக்கோரி குன்னூரில் வருகிற 13–ந் தேதி தேயிலை வாரிய அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று

ஊட்டி,

படுக தேச கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் மஞ்சைமோகன் தலைமை தாங்கினார். அரசியல் ஆலோசகர் குள்ளா கவுடர் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் கட்சி தலைவர் மஞ்சைமோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு தேயிலை விவசாயிகள் பச்சை தேயிலைக்கு போதிய விலை இல்லாமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். பல்வேறு காலக்கட்டங்களில் பச்சை தேயிலைக்கு உரிய விலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. இருந்தாலும், விலை உயர்வு சம்பந்தமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை. எனவே, நீலகிரியில் பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.30 வழங்க வேண்டும். தேயிலை வாரியம் சிறு விவசாயிகளின் ரூ.40 கோடி நிலுவைத்தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்களை மீண்டும் மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் தன்னாட்சி கவுன்சில் அமைத்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும். நீலகிரியில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 13–ந் தேதி குன்னூரில் உள்ள தேயிலை வாரிய அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது விவசாயிகள் சங்க ஆலோசகர் பெள்ளி உடனிருந்தார்.


Next Story