புதிதாக கட்டப்பட்டு வந்த பள்ளி கட்டிடம் இடிந்து வடமாநில தொழிலாளி பலி
பொள்ளாச்சியில் புதிதாக கட்டப்பட்டு வந்த பள்ளி கட்டிடம் இடிந்து வடமாநில தொழிலாளி இறந்தார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்தூர் புதுக்காலனியில் அழகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான மகிரிஷி வித்யா மந்திர் பள்ளி உள்ளது. இங்கு தரைதளத்துடன் சேர்த்து 2 தளங்கள் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் 2–வது தளத்தில் மேற்கூரை அமைக்க நேற்று சென்ட்ரிங் கம்பிகள் கட்டி கான்கிரீட் கலவை போடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென அந்த கான்கிரீட் கட்டிடம் இடிந்தது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் முதல்தளத்தின் மேற்கூரையில் விழுந்தனர். அந்த மேற்கூரையும் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் தரைதளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 11 பேரை பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரும் தீயணைப்பு படையினரும் 4 பேரை நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இவர்களில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கண்ணா (வயது 18) சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 14 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட என்ஜினீயர் கணேஷ்குமாரை தேடி வருகின்றனர்.