நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.
நெல்லை,
நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.
சான்றிதழ் சரிபார்க்கும் பணிதமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை மாதம் நடக்கிறது. இந்த கலந்தாய்வுக்கு செல்பவர்களுக்கு அவர்களுடைய உண்மை சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்க தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 42 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த மையங்களில் நேற்று சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது. நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்க்கும் பணியை சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியரும், நெல்லை மையத்தின் பல்கலைக்கழக பிரதிநிதியுமான ஜார்ஜ் வாஷிங்டன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், ஒருங்கிணைப்பாளர்களான கல்லூரி துணை முதல்வர் சித்தார்த்தன், பேராசிரியர் லதா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாணவ–மாணவிகள்நெல்லை மையத்துக்கு சான்றிதழ் சரிபார்க்க தினமும் குறிப்பிட்ட மாணவ–மாணவிகளுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பி வரவழைக்கப்படுகிறார்கள். முதல் நாளான நேற்று 400–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் வந்திருந்தனர். அவர்களது எஸ்.எஸ்.எஸ்.சி., பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிக்கூட மாற்றுச்சான்றிதழ், சாதி சான்று உள்ளிட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களின் அசல் சான்றிதழ்களை பெற்று சரிபார்த்தனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன் கூறுகையில், ‘‘சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வருகிற 14–ந்தேதி வரை நடைபெறுகிறது. ஆன்லைன் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ள சான்றிதழ்கள் சரியானதுதானா? என்பதை அசல் சான்றிதழ்களை பார்த்து உறுதி செய்யப்படுகிறது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த பணி நடைபெறும். இதற்காக நெல்லை மையத்தில் 48 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்’’ என்றார்.