தர்மபுரி மாவட்ட போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க சிறப்பு பயிற்சி


தர்மபுரி மாவட்ட போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க சிறப்பு பயிற்சி
x
தினத்தந்தி 9 Jun 2018 4:00 AM IST (Updated: 9 Jun 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தர்மபுரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி.டேவிட்சன் தேவஆசிர்வாதம் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் போலீசாருக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை குறைப்பது தொடர்பாக இயற்கை மருத்துவர்கள், யோகா பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை காவல்துறையின் ஐ.ஜி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் பேசியதாவது.

போலீசாருக்கு பல்வேறு விதமான மன அழுத்தங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய மன அழுத்தத்தை குறைத்து அவர்களுடைய பணித்திறனையும், உடல்நலனையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை வழங்க இயற்கை மருத்துவர்கள், யோகா பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் பயிற்றுனர்களாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பயிற்சியை அளிக்க தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை பெற்றவர்கள் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கு மனஅழுத்தத்தை குறைத்தல் மற்றும் மனநல, உடல்நல மேம்பாட்டுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story