தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட கூடிய பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட கூடிய பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Jun 2018 4:15 AM IST (Updated: 10 Jun 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தா அறிவுறுத்தினார்.

பெரம்பலூர்,

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. கடந்த காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்தும், அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முன்கூட்டியே அறிந்து கொள்வதுடன், அங்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து திட்டமிட வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க சமுதாய கூடங்கள், பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் அனைத்து வசதிகளும் செய்து தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளில் தேவையான அளவு உணவுப்பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும். பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் சேதங்கள் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மின்சாரம் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பலவீனமான மின்மாற்றிகள், மின்கம்பங்கள் மற்றும் தாழ்வான மின் கம்பிகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்ய மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை நேரத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் தாசில்தார்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story