தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தகராறு: சூலூரில் கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகளின் கார் கண்ணாடி உடைப்பு


தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தகராறு: சூலூரில் கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகளின் கார் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 9 Jun 2018 11:00 PM GMT (Updated: 9 Jun 2018 6:58 PM GMT)

கோவையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக சூலூரில் கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க மாவட்ட நிர்வாகி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சூலூர்,

கோவை அவினாசி ரோடு நவ இந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி கூட்ட அரங்கத்தில், தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் அமீர், தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, த.மா.கா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 8 பேர் கலந்து கொண்டு பேசினர்.

விவாதத்தின் போது தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவல் காரணமாக தான் கலவரம் ஏற்பட்டதாக தனது கருத்துகளை கூறியதாக தெரி கிறது. உடனே அமீர், கோவையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சசிகுமார் கொலை நடந்த பிறகு ஏற்பட்ட கலவரத்திலும் சமூக விரோதிகளின் ஊடுருவல் தான் காரணமா? என கேட்டதாக தெரிகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தனியரசு ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக விவாத நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து தனியரசு, இயக்குனர் அமீரை தனது காரில் பாதுகாப்பாக அவர் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவினாசி சாலையில் விவாத நிகழ்ச்சி கூட்டத்தில் கலந்து கொண்ட கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகளின் கார்கள் முதலிபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் திடீரென்று காரை வழிமறித்தனர். பின்னர், அரிவாளால் கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

அப்போது காரில் இயக்குனர் அமீர் இல்லை என்று தெரிந்ததும், ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வரைந்து வந்த கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் மற்றும் சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியதாக ஊத்துப்பாளையம் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி முருகேசன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story