மாவட்ட செய்திகள்

3 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டுகிறது வால்பாறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு + "||" + Rain continuously for 3 days Flood floods in Valparai

3 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டுகிறது வால்பாறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

3 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டுகிறது வால்பாறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
வால்பாறையில் 3 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்கு தண்ணீர் புகுந்தது. மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை,

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறையில் பருவ மழை பலமாக பெய்து வருகிறது.

வால்பாறையில் கடந்த 7–ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 2 நாட்களாக பெய்த மழை நேற்று முன்தினம் இரவு தீவிரமடைந்தது. சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

கன மழை காரணமாக வால்பாறையில் இருந்து சோலையார் அணை பகுதிக்கு செல்லும் சாலையில் வரட்டுப்பாறை எஸ்டேட் அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. மேலும், சாலையில் மண் குவிந்து கிடக்கிறது. தொடர்ந்து மழை பெய்வதால் சாலை சேறும், சகதியுமாக மாறியது. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறையில் இருந்து சோலையார் அணைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதேபோல் சேக்கல்முடி, உருளிக்கல், வில்லோனி ஆகிய எஸ்டேட் பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. சாலையிலேயே அணிவகுத்து நின்றன.

பாறைகள் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதால் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. வால்பாறையை அடுத்த வரட்டுப்பாறையில் காபி தோட்டத்தில் இருந்த ஏராளமான செடிகள் வேரோடு அடித்துச்செல்லப்பட்டன.

கன மழைக்கு வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைபுரண்டு ஓடிய மழை வெள்ளம் வாழைத்தோட்டம் மற்றும் டோபி காலனி குடியிருப்புக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். கக்கன்காலனி குடியிருப்பு பகுதிக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. டோபி காலனியில் நடராஜ் என்பவரின் வீடும், சிறுவர் பூங்கா பகுதியில் குஞ்சப்பன் என்பவரின் வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது.

வால்பாறையில் இருந்து கருமலை எஸ்டேட் செல்லும் சாலையில் நடுமலை, பச்சைமலை, கருமலை எஸ்டேட் பகுதிகளிலும் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்யும் மழையால் பெரிய அளவில் மண்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

வால்பாறை– பொள்ளாச்சி சாலையில் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு அவர்களே மண்ணை அகற்றி போக்குவரத்தை சரிசெய்ய தொடங்கினார்கள். பின்னர் நெடுஞ்சாலை துறையினர் மண்சரிவை அகற்றினர்.

வால்பாறையில் வரலாறு காணாத வகையில் பெய்யும் கன மழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, ஸ்டேன்மோர் ஆறு, வாழைத்தோட்டம் ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்கள் தண்ணீர் மூழ்கின. வால்பாறையில் 10–க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. 100–க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் பல இடங்களில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக வால்பாறை பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் வருமாறு:–

சோலையார் 85 மி.மீ., பரம்பிக்குளம் 59 மி.மீ., ஆழியாறு 9.2 மி.மீ., திருமூர்த்தி 1 மி.மீ., வால்பாறை 62 மி.மீ., அப்பர் நீராறு 86 மி.மீ., லோயர் நீராறு 73 மி.மீ., காடம்பாறை 19 மி.மீ., சர்க்கார்பதி 18 மி.மீ., வேட்டைக்காரன்புதூர் 28 மி.மீ., மணக்கடவு 67.8 மி.மீ., தூணக்கடவு 37 மி.மீ., பெருவாரிபள்ளம் 35 மி.மீ., அப்பர் ஆழியாறு 4 மி.மீ., நவமலை 6 மி.மீ., பொள்ளாச்சி 54 மி.மீ., நல்லாறு 5 மி.மீ., நெகமம் 24 மி.மீ.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாத கனமழை கொட்டுகிறது. இதன் காரணமாக அடிவாரத்தில் அமைந்துள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர் வீழ்ச்சியில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் இந்த நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளார்.

இதனால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோடையில் வறண்டு கிடந்த நீர் வீழ்ச்சியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்க்க மிகவும் அழகாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சி வழியாக ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: 4வது நாளில் மழையால் ஆட்டம் பாதிப்பு
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளான இன்று உணவு இடைவேளை வரை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.
2. இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு; ஆஸ்திரேலியா 236/6 (83.3 ஓவர்கள்)
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.
3. மெல்போர்ன் டெஸ்ட்; மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 5வது நாளில் மழையால் ஆட்டம் தொடங்குவது பாதிப்படைந்து உள்ளது.
4. ஊட்டி– எமரால்டு சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ஊட்டி – எமரால்டு சாலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் கட்ட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
5. உலகைச்சுற்றி...
இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம், நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர்.