புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2018 4:30 AM IST (Updated: 10 Jun 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ அமைப்பு) சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் தமிழ்மணியன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத கால நிலுவை தொகையினை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

ரத்து செய்ய வேண்டும்

பள்ளிக்கல்வி துறையில் ஆட்குறைப்பு என்கிற அடிப்படையில் பணிநிரவல் மூலம் ஆசிரியர்களை பணிமாறுதல் செய்வதை கைவிட வேண்டும். கல்வித்துறையை குழப்பத்திற்கு உள்ளாக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செல்வமணி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் இருதயசாமி உள்பட ஜாக்டோ அமைப்பை சேர்ந்த ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story