அரசு மருத்துவமனைக்கு ரூ.32½ லட்சத்தில் நலதிட்ட உதவிகள் தம்பிதுரை– எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினர்
கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ரூ.32½ லட்சத்தில் நலதிட்ட உதவிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.
கரூர்,
கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தின் சார்பில் மருத்துவமனை மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.32 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் உபகரணங்களை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் பேசுகையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சமுதாய மேம்பாட்டு நலப்பணியாக கிராமப்புற மக்களுக்கு மருத்துவம், கல்வி, சமுதாயமேம்பாடு, உள் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது. இதனை நல்ல முறையில் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் பேசுகையில், தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு பல்வேறு திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி நல்லதொரு சுகாதார சூழலை உருவாக்கி வருகிறது. மகப்பேறு மருத்துவம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, முதல்–அமைச்சர் ஒருங்கிணைந்த விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாக நோய்நொடியற்ற சமுதாயத்தினை உருவாக்கி வருகிறது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ரூ.2 லட்சம் மதிப்பில் 25 கட்டில் மற்றும் 25 மெத்தைகள் மற்றும் 6 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவித்தொகையாக ரூ.70,000–க்கான காசோலைகள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை பேரூராட்சிக்கு உட்பட்ட மூலிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் வசதி மற்றும் குடிநீர் வசதிகள் என்பன உள்ளிட்ட மொத்தம் ரூ.32 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கரூர் மாவட்டம் ஆத்தூர், பூலாம்பாளையம், காதப்பாறை, வாங்கல் குப்புச்சிபாளையம், நெரூர் வடபாகம், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, நெரூர் தென்பாகம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேற்று புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் ரூ.62 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதிய பணிகளுக்கு பூமிபூஜையிட்டு பாராமன்ற துணை சபாநாயகர், போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கினார்.
அந்த வகையில் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் காந்தி நகர் பகுதியில் ரூ.6 லட்சத்து 65 ஆயிரம் நத்தமேடு ஓடையில் தடுப்பணை பணிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆத்தூர் பூலாம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.10 லட்சத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணிகள் என்பன உள்ளிட்டவற்றுக்கு மொத்தம் ரூ.62 லட்சத்து 65 ஆயிரத்தில் பூமிபூஜை போடப்பட்டது. இந்த பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், தமிழ்நாடு காகித ஆலை பொதுமேலாளர் பட்டாபிராமன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் (மண்மங்கலம்) கற்பகம், ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மீனாகுமாரி, மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், முன்னாள் மாணவரணி செயலாளர் என்.தாணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.