மாவட்ட செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் பக்தர்களை ஓட, ஓட விரட்டி கொட்டின + "||" + The bees constructed in the big temple temple of Tanjore were forced to run and run the devotees

தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் பக்தர்களை ஓட, ஓட விரட்டி கொட்டின

தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் பக்தர்களை ஓட, ஓட விரட்டி கொட்டின
தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து பக்தர்களை ஓட, ஓட விரட்டி கொட்டியதில் 6 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாக, கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த கோவிலுக்கு வருபவர்கள் கோவிலின் கட்டிட கலையையும், சிற்பக்கலையையும் பார்த்து வியந்து செல்கின்றனர்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலின் முகப்பில் கேரளாந்தகன் கோபுரமும், அதற்கு அடுத்ததாக ராஜராஜன் கோபுரமும், பெருவுடையார் சன்னதிக்கு மேல் பகுதியில் 216 அடி உயர கோபுரமும் உள்ளது.

மற்ற கோபுரங்களை காட்டிலும் கோவிலின் முகப்பில் உள்ள கேரளாந்தகன் கோபுரத்தின் முதல் தளம் தவிர மற்றவை சிறப்பான தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. கடந்த 5-ந் தேதி தஞ்சையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கேரளாந்தகன் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கீர்த்தி முகத்தில் இருக்கும் சிற்பம் உடைந்து சேதம் அடைந்தது.

இதனையடுத்து அந்த கோபுரத்தை ஆய்வு செய்த தொல்லியல்துறையினர், சேதம் அடைந்த சிற்பத்தை பழமை மாறாமல் புனரமைக்க முடிவு செய்தனர். இதனால் புனரமைப்பு பணிக்காக சாரம் அமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

நேற்று 2-வது நாளாக சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்காக இரும்பு கம்பிகளை கயிறு கட்டி கோபுரத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

கோபுரத்தில் ஏராளமான புறாக்கள் வசித்து வருகின்றன. மேலும் மலை தேனீக்களும் கூடு கட்டியுள்ளன. இரும்பு கம்பிகளை கோபுரத்திற்கு தொழிலாளர்கள் கொண்டு சென்றபோது கோபுரத்தில் வசித்து வந்த புறாக்கள் கலைந்து அங்கும், இங்குமாக பறந்தன. இதனால் தேனீக்களும் கலைந்து கோபுரத்தில் நின்று கொண்டிருந்த தொழிலாளர்களை கொட்ட ஆரம்பித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவசர, அவசரமாக அவர்கள் கோபுரத்தை விட்டு கீழே இறங்கி தலைதெறிக்க ஓடினார்.

தொழிலாளர்களை விரட்டி, விரட்டி தேனீக்கள் கொட்டியதுடன் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களையும் ஓட, ஓட விரட்டியது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தேனீக்களிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக அலறி அடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். இதனால் அங்கு ஒரே பரபரப்பு நிலவியது.

பெண்கள் தாங்கள் அணிந்து இருந்த சேலையாலும், மாணவிகள் துப்பட்டாவினாலும் தங்களது முகத்தை மூடியபடி முக்காடு போட்டு கொண்டும், அட்டைகளால் தேனீக்கள் அருகில் வராதபடி அடித்து கொண்டும் தப்பி ஓடினர். சிறுவர், சிறுமிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் கோவிலுக்குள் ஓடிச் சென்று பாதுகாப்பாக நின்று கொண்டனர்.

தேனீக்கள் பெரியகோவிலுக்கு முன்புள்ள சாலை வரை பறந்து வந்து பக்தர்களை அச்சுறுத்திக் கொண்டு இருந்ததால் கோவிலுக்குள் பக்தர்கள் யாரையும் செல்ல மேற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பெரியகோவிலை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாலையோரம் காத்து நின்றனர்.

பக்தர்களை, தேனீக்கள் விரட்டி, விரட்டி கடித்த சம்பவம் குறித்து தஞ்சை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து தேனீக்கள் எந்த தளத்தில் கூடு கட்டி இருக்கிறது என்று கோபுரத்தில் ஏறி பார்வையிட்டனர்.

மேலும் தேனீக்களுக்கு பயந்து கோவிலுக்குள் நின்ற பக்தர்களை பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர். தேனீக்களை இரவு நேரத்தில்தான் எளிதாக அழிக்க முடியும் என்பதால், கோபுரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்களை தீயணைப்பு வீரர்கள் எதுவும் செய்யாமல் திரும்பி சென்று விட்டனர். இரவு நேரத்தில் தேனீக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

தேனீக்கள் விரட்டி, விரட்டி கொட்டியதில் சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தஞ்சை வடக்குவாசல் கள்ளுக்கட்டி தெருவை சேர்ந்த ஆரோக்கியதாஸ்(வயது 32), பாபநாசம் தாலுகா அருள்மொழிப்பேட்டையை சேர்ந்த கணேசன்(48), களிமேடு பிருந்தாவனத்தை சேர்ந்த முருகேஸ்வரன்(23), பெரிய கோவிலில் உள்ள காலணிகள் பாதுகாப்பு மையத்தில் பணி புரிந்த தஞ்சை பாலாஜி நகரை சேர்ந்த ராஜ்குமார், காவலாளியாக பணிபுரியும் கரந்தை சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல்(63), கோவில் பணியாளர், தஞ்சை கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த விஜயகுமார்(52) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோ மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர்கள், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தஞ்சை பெரிய கோவிலில் நேற்று நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வந்தால் தஞ்சை பெரியகோவிலில் தியான பயிற்சி நடத்தப்படும் ரவிசங்கர் குருஜி பேட்டி
கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வந்தால் தஞ்சை பெரியகோவிலில் தியான பயிற்சி நடத்தப்படும் என்று ரவிசங்கர் குருஜி கூறினார்.
2. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டு ஆய்வு
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.
3. தஞ்சை, நாகை, திருவாரூரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டெல்டா பகுதியில் ‘கஜா’ புயல் ஏற்படுத்திய கோர தாண்டவம்
டெல்டா பகுதியில் ‘கஜா’ புயலின் கோர தாண்டவம் காரணமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
4. தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜன் கோபுரத்தை தூய்மைப்படுத்த சாரம் அமைக்கும் பணி மும்முரம்
தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜன் கோபுரத்தை தூய்மைப்படுத்த சாரம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
5. தஞ்சை- திருவாரூர் கோவில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு
தஞ்சை பெரியகோவில், திருவாரூர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறை அதிகாரிகள் சிலைகளை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தொல்லியல் துறை மண்டல கூடுதல் இயக்குனர் நம்பிராஜன் கூறினார்.