10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஜாக்டோ’ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஜாக்டோ’ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2018 4:30 AM IST (Updated: 10 Jun 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ‘ஜாக்டோ’ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவானது (ஜாக்டோ) தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழாசிரியர் கழகம், தமிழக ஆசிரியர் கூட்டணி, மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 21 ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்ததாகும். தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். 7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத கால நிலுவைத்தொகையினை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் ஆட்குறைப்பு என்ற அடிப்படையில் பணி நிரவல் மூலம் ஆசிரியர்களை பணிமாறுதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஜாக்டோ அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அதன்படி, திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ‘ஜாக்டோ’ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சேவியர் பால்ராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அந்தோணி எட்வர்ட்ராஜ், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரவேல், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட தலைவர் ரபெல், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் சங்க மாவட்ட தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆசிரியர் மன்ற மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் சே.நீலகண்டன் கலந்து கொண்டு 10 அம்ச கோரிக்கைகளை விளக்கி பேசினார். மேலும் மாநில நிர்வாகிகள் சுந்தரராஜன், அன்பரசன் ஆகியோரும் பேசினார்கள். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் சே.நீலகண்டன் கூறுகையில், “6 முதல் 10 வரை உள்ள வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நிலுவையில் உள்ளவர்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். மாறாக முதுகலை ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்த அனுமதித்து அங்குள்ள பட்டதாரி ஆசிரியர்களை உபரி என்று தெரிவித்து அனுமதிக்கப்பட்ட பணியிடங்களோடு ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாறுதல் செய்யும் கல்வித்துறையின் முயற்சியை அரசு கைவிட வேண்டும். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் கல்வித்துறையை குழப்பத்தில் ஆழ்த்தும் அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தப்படும், என்றார். 

Next Story