கிருஷ்ணகிரியில் ஜாக்டோ கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் ஜாக்டோ கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2018 11:00 PM GMT (Updated: 9 Jun 2018 9:12 PM GMT)

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எதிரில், மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ கூட்டமைப்பு) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஹரி முன்னிலை வகித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் வரவேற்று பேசினார்.

இதில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சரவணன் பங்கேற்று பேசினார். ஜாக்டோ இணைப்பு சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் துரை.சாமராஜன் நன்றி கூறினார்.

இதில் சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் திருத்தம் செய்து வழங்குதல் மற்றும் 1.6.2000-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு சமநிலை ஊதியம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஆர்.டி.இ. சட்டத்தின்படி அரசு பள்ளி மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை குறைப்பு செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஜாக்டோ கூட்டமைப்பினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story