மலைக்கோட்டையில் 1,250 மரக்கன்றுகள் நடும் பணி நிறைவு: சொட்டுநீர் பாசனம் மூலம் பராமரிப்பு
திண்டுக்கல் மலைக்கோட்டையில் 1,250 மரக்கன்றுகள் நடும் பணி நிறைவடைந்ததையடுத்து, சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைக்கோட்டை ஒரே பாறையால் ஆனது. கோடைகாலத்தில் வெயில் நேரடியாக பாறையில் விழுவதால், அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வெப்பம் அதிகரிக்கிறது.
இதனை தடுக்கும் வகையில் மலைக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வனத்துறை மூலம் முதற்கட்டமாக 2 ஆயிரத்து 750 மரக்கன்றுகள் நடும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக, மலைக்கோட்டையில் உள்ள பாறைகளில் மண் நிரப்பிய இரும்பு பேரல்கள் வைக்கப்பட்டன.
பின்னர், அதற்குள் பாறைகளில் நன்கு வேர் ஊன்றி வளரக்கூடிய ஆலமரம், அரசமரம், கல்ஈச்சு ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, திண்டுக்கல் மலைக்கோட்டையில் 1,250 மரக்கன்றுகளும், மலைக்கோட்டையை சுற்றி 1,500 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக கோடை மழை பரவலாக பெய்ததால் மலைக்கோட்டையின் மேலே உள்ள குட்டைகள் நிரம்பிவிட்டது. இங்கு மோட்டார் அமைத்து சொட்டுநீர் பாசனம் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். இவற்றை பராமரிப்பதற்காக ஒரு வனத்துறை ஊழியரும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
Related Tags :
Next Story