நீடித்த ஆயுளுக்கு ‘தண்ணீர் ஆசனம்’


நீடித்த ஆயுளுக்கு ‘தண்ணீர் ஆசனம்’
x
தினத்தந்தி 10 Jun 2018 11:20 AM IST (Updated: 10 Jun 2018 11:20 AM IST)
t-max-icont-min-icon

யோகாசனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம்.

நாட்டின் உயர்தர நலவாழ்வு மையங்களிலும், ரிசார்ட் களிலும் இந்த ஆசனத்தில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். தண்ணீருக்குள் நின்றபடி உடலின் மேற்பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும்படியும், சில வேளைகளில் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடக்கியும் இந்த தண்ணீர் ஆசனம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீரின் மீது மிதக்கும் பலகையிலும் ஆசனம் செய்கிறார்கள்.

கடல் நீர் நிரப்பிய நீச்சல்குளங்கள், வெந்நீர் நிரப்பிய குளியல் தொட்டிக்குள் இந்த தண்ணீர் ஆசனங்களைச் செய்கின்றனர். இதை முடித்து வெளியே வரும்போது, உடல், மனம், உணர்வு எல்லாமே புத்துணர்ச்சி பெறுவதாகக் கூறுகிறார்கள். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.

முன்னணி நலவாழ்வு மையம் ஒன்றின் நிறுவனர் நிகில் கபூர், இந்த யோகாசனத்தை மிக எளிமையாக செய்துவிடலாம் என்கிறார்.

‘‘தண்ணீர் யோகாசனமானது வலு, நிலைத்தன்மை, சமச்சீர், பல்வேறு அசைவுகள் என்று உடலின் அடிப்படைப் பணிகளை மேம்படுத்த உதவுகிறது. இந்த யோகாசனம் தற்போது பிரபலமாகிவருகிறது. யோகாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வர்களும், புதிதாக அதில் ஈடுபடுபவர்களும் தண்ணீர் ஆசனத்தை மேற்கொள்ளலாம். இதில் ஈடுபடுபவர்கள், தண்ணீரின் நலமளிக்கும் தன்மையை அனுபவப்பூர்வமாக உணரலாம். வழக்கமாக தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தைவிட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கைகொடுக்கிறது. தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல்களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடிகிறது’’ என்று கூறு கிறார்.

தண்ணீருக்குள் சூரிய நமஸ்காரம், விருக்‌ஷா சனம், அர்த்த சக்கராசனம், தனுராசனம் ஆகியவை பெரும்பாலும் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரமானது ஒட்டுமொத்த உடம்பின் வலுவையும் ஒழுங்கையும் கூட்டுகிறது. விருக்‌ஷாசனம் நிலைத்தன்மையையும், நெகிழ்வுத்தன்மையையும், அர்த்த சக்ராசனமானது முதுகெலும்பு மற்றும் பின்பகுதித் தசை களுக்கு நெகிழ்வுத்தன்மையையும், தனுராசனம் உடம்பின் மேற்பகுதியை வளைத்து, தோள்பட்டைகளை வலுப்படுத்தவும், முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது என்கிறார்கள். வீரபத்ராசனமும் தண்ணீருக்குள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.

வெளிநாட்டைச் சேர்ந்த யோகாசன ஆர்வலரான பார்பரா ஹாஸ், தண்ணீர் ஆசனத்தைக் கற்றுக்கொள்வதற்காகவே இந்தியாவுக்குப் பறந்து வந்திருக்கிறார். இது உடல் ரீதியாக கொஞ்சம் சவாலான ஆசன முறை என்பது அவரது கருத்து.

‘‘இதில், சுவாசம் மற்றும் உடல் வலுவால் நமது சமநிலையைப் பராமரிப்பதுடன், தண்ணீர் இயக்கத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆரம்பத்தில் எனக்கு வேடிக்கையாகத் தோன்றிய இது, போகப் போக சவாலாக மாறியது. ஆனால் இதைச் செய்துமுடிக்கும்போது, வெற்றிகரமான, மனமார்ந்த பயிற்சியாகத் தோன்றுகிறது. தரையில் செய்வதைவிட தண்ணீருக்குள் ஆசனம் செய்யும்போது கடினமாகத் தோன்றினாலும், முழு உடம்புக்கும் நல்ல பயிற்சி ஆகிறது’’ என்று பார்பரா கூறுகிறார்.

தண்ணீர் ஆசனம் போலவே, தண்ணீர் மீது மிதக்கும் பலகை மீது செய்யும் ஆசனமும் பிரபலமாகி வருகிறது.

இதுபற்றி நிகில் கபூர், ‘‘நீங்கள் யோகாசனத்தில் தேர்ந்தவராக இருந்தாலும் சரி, இப்போதுதான் தொடங்குகிறவராக இருந்தாலும் சரி, தண்ணீரில் மிதக்கும் பலகையில் கை வைத்ததுமே, இது வேறு மாதிரி என்று உணரத் தொடங்கிவிடுவீர்கள்’’ என்கிறார்.

அலைச்சறுக்கில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த தண்ணீர்ப் பலகை யோகாசனம் பிடிக்கும் என்கிறார்கள். அதை உறுதிப்படுத்துவது போல வெளிநாட்டவரும் அலைச்சறுக்குப் பிரியருமான மேரி டைசியாக், தான் இந்தியா வரும்போது இந்த யோகாசனத்தை கற்க இருப்பதாகக் கூறுகிறார்.

‘‘நான் இதை தண்ணீரில் செய்து பார்த்தபோது, எதிர்பார்த்ததைவிட கடினமாகவே இருந்தது. ஆனாலும் நான் அதை ரசித்தேன். தண்ணீரில் மிதந்தபடி ஆசனங்களைச் செய்வதற்கு உடம்பின் அனைத்து தசைகளையும் பயன் படுத்த வேண்டியிருக்கிறது. எனவே இது உடம்புக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும் என உணர முடிகிறது’’ என்று சொல்கிறார்.

‘‘மிதக்கும் பலகையில் ‘பேலன்ஸ்’ செய்து ஆசனங்களை மேற்கொள்ளும்போது தசைகளின் வலுவையும் தன்மையையும் மேம்படுத்துகிறது, தசைப்பிடிப்பு தன்மையைக் குறைக்கிறது’’ என்றும் பயிற்சி பெற்றவர்கள் கூறுகிறார்கள்.

தண்ணீர் யோகா சனத்தைப் போலவே, ஜும்பா நடன அசைவுகளை தண்ணீருக்குள் மேற்கொள்ளும் அக்வா ஜும்பாவும் யோகாசனப் பிரியர்களை கவரத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக மாலத்தீவில் உள்ள ஒரு ரிசார்ட் செய்தித்தொடர்பாளரான தீவிகா நிஜாவன் கூறும்போது, ‘‘அக்வா ஜும்பாவை தண்ணீருக்குள் மேற்கொள்ளும்போது தண்ணீரின் எதிர்ப்புத்தன்மையானது தசைத் திரட்சியை அதிகரிக்கவும், உடம்பின் தாக்குப்பிடிக்கும் தன்மையையும் நெகிழ்வுத்தன்மையைக் கூட்டவும் உதவுகிறது’’ என்று சொல்கிறார்.

இனியென்ன, தண்ணீரில் தாராளமாய் மிதக்கலாம்! நீடித்த ஆயுளுடன் வாழலாம்! 

Next Story