குமரி மாவட்டத்தில் சூறாவளி காற்றில் ஏராளமான வாழைகள் சேதம்


குமரி மாவட்டத்தில் சூறாவளி காற்றில் ஏராளமான வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 11 Jun 2018 4:30 AM IST (Updated: 10 Jun 2018 10:32 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சூறாவளி காற்றில் ஏராளமான வாழைகள் சேதமடைந்தன.

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வீசிய ஒகி புயலால் பெரும் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. குறிப்பாக ஏராளமான வாழைகள் முறிந்து விழுந்து விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். அதன்பின்பு, சில விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து மீண்டு மறுபடியும் வாழை விவசாயம் செய்ய தொடங்கினர். அவை தற்போது குலை தள்ளிய நிலையில் காணப்பட்டது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையுடன் அவ்வப்போது பலத்த காற்று வீசுவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டு வருகிறது.

குலசேகரம், திருவட்டார் போன்ற பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் ஏராளமான வாழைகள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, குலசேகரம் அருகே திருவரம்பு, மங்கலம், பொன்மனை, திற்பரப்பு, அருமனை, சிதறால் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசமானது. இந்த வாழைகள் அனைத்தும் நன்கு வளர்ந்து குலை வந்த நிலையில் காணப்பட்டன. இதனால், விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுபோல், மாவட்டம் முழுவதும் ஏராளமான வாழைகள் சேதமடைந்தன.

மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல கிராமங்கள் இருளில் மூழ்கின.

கனமழையால் திக்குறிச்சி, ஞாறான்விளை, ஆற்றூர் போன்ற பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலையோர பகுதிகளில் ரப்பர் பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர்.

Next Story