அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி திவாகரன் தொடங்கினார்


அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி திவாகரன் தொடங்கினார்
x
தினத்தந்தி 11 Jun 2018 4:45 AM IST (Updated: 11 Jun 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை சசிகலா சகோதரர் திவாகரன் தொடங்கினார்.

மன்னார்குடி,

ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டனர். இந்தநிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் அந்த அணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டது.

பின்னர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் இணைந்தனர். இதனால் சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார்.

இந்தநிலையில் டி.டி.வி.தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் அம்மா அணி என்ற பெயரில் திவாகரன் புதிய அமைப்பை தொடங்கினார்.

இந்தநிலையில் நேற்று மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை திவாகரன் தொடங்கி வைத்து கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் நிர்வாகிகளையும் அறிவித்தார்.

பின்னர் அவர் கட்சியின் முக்கிய கொள்கைகளை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் பண பலத்தை எதிர்ப்பது, இளைஞர்களை ஆக்கப்பூர்வமாக செயல்பட வைப்பது, நீர்சேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய கொள்கைகளாக கொண்டு எங்கள் கட்சி செயல்படும். தற்போது மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். விரைவில் ஒன்றிய, நகர, பேரூர் ஆகிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கன்னடர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிதான் ரஜினிகாந்த். நடிகர் கமல்ஹாசன் காவிரி பிரச்சினையில் 50 ஆண்டுகள் பின்னோக்கி எல்லோரையும் அழைத்து செல்கிறார். காவிரி குறித்து அவருக்கு எதுவும் தெரியாது. எம்.ஜி.ஆர். ஒரு மாபெரும் தலைவர். அவரைப்போல வர வேண்டும் என்று நடிகர்கள் நினைப்பது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதைதான்.

ஜெயலலிதா சிகிச்சை குறித்த ஆடியோ உண்மைதான். நானும் இதைத்தான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு தெரிவித்துள்ளேன். டி.டி.வி.தினகரன் அரசியல் வேறு உறவு வேறு என்று இப்போது கூறுகிறார். அதுபோல் இருந்திருந்தால் இன்று அவர் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. நான்(திவாகரன்) அ.தி.மு.க.வில் இணைய போகிறேன் என்ற செய்தியில் உண்மையில்லை.

இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று தனிக்கட்சி தொடங்கி கொடியை அறிமுகப்படுத்தி உள்ளோம். தமிழகத்தில் யாரும் அரசியல் செய்யவில்லை. எல்லோரும் கும்மியடித்து கொண்டிருக்கிறார்கள். அரசியலில் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் இருந்து வருகிறேன். தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டபோது எஸ்.டி.எஸ்., அழகுதிருநாவுக்கரசு, பைங்காநாடு ஞானசேகரன் ஆகியோருடன் நான் வேலை செய்திருக்கிறேன். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு ஜெ அணி நிர்மானிக்கப்பட்டதில் 90 சதவீதம் என்னுடைய பங்களிப்பு இருந்தது.

ஜெயலலிதாவை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் அழைத்து சென்றது நான் தான். நான் எதையும் வெளிப்படையாக பேசுபவன். உண்மையை சொன்னால் யாருக்கும் பிடிக்காது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்கு தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் சிறந்த உதாரணம் ஆகும். தற்போது கருத்து சுதந்திரம் இல்லை. பத்திரிகையாளர்கள் மீது வழக்கு போடப்படுகிறது. இதை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story