மாவட்ட செய்திகள்

தென்மேற்கு பருவமழை தீவிரம் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம் + "||" + Southwest monsoon intensity Water expulsion from Billaur Dam

தென்மேற்கு பருவமழை தீவிரம் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்

தென்மேற்கு பருவமழை தீவிரம் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை எழில் சூழலில் பில்லூர் அணை அமைந்து உள்ளது. நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. அணை உயரம் 100 அடியாகும்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 87 அடியாக உயர்ந்தது.

அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து இங்குள்ள மின் உற்பத்தி நிலையத்தில் 2 எந்திரங்கள் இயக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதற்காக அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் இரவு 12 மணிக்கு அணையின் நீர்மட்டம் 80.25 அடியாக குறைந்தது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 94 அடியை எட்டியது. ஒரே இரவில் அணையின் நீர்மட்டம் 14 அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று மதியம் 2 மணிக்கு அணை நீர்மட்டம் 96.5 அடியை எட்டியது. இதனால் நேற்று மதியம் 2 மணிக்கு அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளில் 2 மதகுகளில் இருந்தும், 2.30 மணிக்கு மீதம் உள்ள 2 மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

4 மதகுகளில் வழியாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே சீராக இருக்கும் வகையில் தண்ணீர் வரத்துக்கு ஏற்ப அதே அளவு தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

பில்லூர் அணை திறப்பு காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.மேட்டுப்பாளையம் வருவாய்த்துறை சார்பில் கிராமங்கள் தோறும் தண்டோரா மூலமும், ஒலிபெருக்கி மூலமும் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை மற்றும் ஆற்றின் கரையோரப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு சென்றுவிடவும், அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கலெக்டர் ஹரிகரன் நேற்று மாலை மேட்டுப்பாளையம் வந்தார். ஊட்டி சாலையில் உள்ள பாலத்தில் நின்றபடி பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டார். அப்போது அவர் அதிகாரிகளிடம், வெள்ளப்பெருக்கையொட்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது கலெக்டருடன் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) செந்தில்வேல், தாசில்தார் புனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வசந்தா மணி, மேட்டுப்பாளையம் நகராட்சி உதவி பொறியாளர் அன்வர் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேற்குதொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் பொங்கும் நுரையுடன் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று காலை 6.30 மணிக்கு நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு புதுவெள்ளம் வந்தடைந்தது. பின்னர் தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பியதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் தடுப்பணையில் இருந்து குளங்களுக்கு ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் திருப்பி விட்டனர். இதன் மூலம் கோளராம்பதி, புதுக்குளம், நரசாம்பதி உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதேபோல் நொய்யல் ஆற்றில் உள்ள குனியமுத்தூர் தடுப்பணையும் நிரம்பி உள்ளது. இங்கு இருந்து கால்வாய்கள் மூலம் பேரூர் செட்டிபாளையம் சொட்டையாண்டி குளம், கங்கநாராயண சமுத்திர குளம், பேரூர் பெரியகுளம், குறிச்சி குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் இந்த குளங்கள் விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பேரூர் படித்துறையை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், குளங்களுக்கு செல்லும் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில விவசாயிகள் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் குளங்கள் நிரம்பினால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாக குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

கோவை குற்றாலத்தில் நேற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் நொய்யல் ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி மழை வெள்ளம் கரைபுரண்டோட வாய்ப்பு உள்ளது. எனவே ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கோவையில் பெய்து வரும் தொடர் மழையினால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலைவரை அணைப்பகுதியில் 90 மில்லி மீட்டரும், அடிவாரத்தில் 100 மில்லி மீட்டரும் மழை பெய்தது. இதனால் ஒரேநாளில் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து, 16½ அடியாக உள்ளது. தொடர்ந்து பருவமழை எதிர்பார்க்கப்படுவதால் சிறுவாணி அணை நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...