திருமருகல் ஒன்றியத்தில் வறட்சியால் காய்ந்த பனைமரங்கள் விவசாயிகள் கவலை


திருமருகல் ஒன்றியத்தில் வறட்சியால் காய்ந்த பனைமரங்கள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 11 Jun 2018 4:00 AM IST (Updated: 11 Jun 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் வறட்சியின் காரணமாக பனைமரங்கள் காய்ந்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திட்டச்சேரி,

தமிழகத்தில் பருவகால மாற்றத்தின் காரணமாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக சரிவர மழை பெய்ய வில்லை. தமிழகத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது அன்றாட குடிநீர் தேவைக்கு தண்ணீர் தேடி பல்வேறு இடங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. நீர்நிலைகள் சரிவர தூர்வாரப்படாததால் அவற்றில் செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் மழை நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சி மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகள், விலங்குகள், மரங்கள் உள்ளிட்ட உயிரினங்களையும் விட்டுவைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மரம், செடி கொடிகளும் தண்ணீர் இன்றி காய்ந்து வருகிறது.

பனைமரங்கள்

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள திருமருகல், பனங்குடி, திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், திருப்புகலூர், திருச்செங்காட்டாங்குடி, வாழ்குடி, விற்குடி ஆகிய பகுதிகளில் முன்னோர்கள் பனைமரங்களின் நலன் கருதி ஆற்று ஓரங்கள், வயல் வரப்புகள், குளங்களின் ஒரங்கள், சாலை ஓரங்களில் பனை மரங்களை வளர்த்தனர். பனை மரங்கள் மனிதனுக்கு பல்வேறு நலனை தருகிறது. பனை மரத்தில் இருந்து நுங்கு, பதநீர் உள்ளிட்டவை கிடைக்கிறது. இது குளிர்ச்சி தரக்கூடியதாகும். பதநீரை பதப்படுத்தி கருப்பட்டி செய்யப்படுகிறது. மேலும் பனை வாரைகள் வீடு கட்டவும், பனை மட்டைகள் வீட்டின் கூரை போடவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் முன்னோர்கள் பனை மரங்களை ஆங்காங்கே விதைத்து வளர்த்து வந்தனர். ஆனால் தற்போது இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவுவதால் பனைமரங்கள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பனை மரங்களில் உள்ள மட்டைகள் காய்ந்து கீழே விழுந்து மொட்டை மரமாக காட்சியளிக்கிறது. மேலும், வறட்சியின் காரணமாக இந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை, மரவள்ளிக்கிழங்கு, பருத்தி உள்ளிட்டவை காய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

Next Story