2–வது திருமணம் செய்வதற்காக இளம்பெண்ணை காரில் கடத்திய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு வலைவீச்சு
2–வது திருமணம் செய்வதற்காக இளம்பெண்ணை கடத்திய போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (வயது 33). கோபி மதுவிலக்கு பிரிவில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக உள்ளார். இவருடைய மனைவி சத்யா (25). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
அந்தியூர் பகுதியை சேர்ந்த சத்யாவின் உறவினர் ஒருவரின் மகள் ஒரு கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். வெங்கடாச்சலம் அந்த இளம்பெண்ணை 2–வது திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.
இந்தநிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வு எழுதினார். பின்னர் அவர் வெளியே வந்தபோது வெங்கடாச்சலம், மனைவி சத்யா மற்றும் குழந்தைகளுடன் அங்கு வந்தார். அதன்பின்னர் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை வெங்கடாச்சலம் காரில் கடத்திச்சென்றதாக தெரிகிறது.
மேலும் பெண்ணின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்டு ‘‘உங்களுடைய மகளை திருமணம் செய்துகொள்ள போகிறேன். அதனால் அவரை தேட வேண்டாம்’’ என்று கூறி மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை இதுபற்றி அந்தியூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் திண்டுக்கல் பகுதியில் வெங்கடாச்சலம், அவருடைய மனைவி சத்யா, கடத்தப்பட்ட பெண் ஆகியோர் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் திண்டுக்கல்லுக்கு விரைந்தனர். வெங்கடாச்சலம், சத்யா, கடத்தப்பட்ட பெண் மற்றும் குழந்தைகள் சேவதண்டான்பட்டி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டு இருந்தனர்.
போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்ததும் வெங்கடாச்சலம் அனைவரையும் அங்கேயே இறக்கி விட்டுவிட்டு காரில் தப்பிச்சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து சேவதண்டான்பட்டி சுங்கச்சாவடியில் நின்றுகொண்டு இருந்த சத்யா, அவருடைய குழந்தைகள் மற்றும் கடத்தப்பட்ட பெண் ஆகியோரை போலீசார் மீட்டு அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அப்போது நடந்த விசாரணையில், வெங்கடாச்சலம் திருமணம் செய்துகொள்வதற்காக இளம்பெண்ணை கடத்திச்சென்றதும், அதற்கு வெங்கடாச்சலத்தின் மனைவி சத்யா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெங்கடாச்சலத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.