உள்நாட்டு வணிகத்தை சீரழிக்கும் வெளிநாட்டு வணிக நிறுவனங்களை தடுப்பதற்கு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி
உள்நாட்டு வணிகத்தை சீரழிக்கும் வெளிநாட்டு வணிக நிறுவனங்களை தடுப்பதற்கு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
வள்ளியூர்,
உள்நாட்டு வணிகத்தை சீரழிக்கும் வெளிநாட்டு வணிக நிறுவனங்களை தடுப்பதற்கு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
வியாபாரிகள் சங்க ஆண்டு விழாநெல்லை மாவட்டம் வள்ளியூரில் வியாபாரிகள் சங்க 85–வது ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் தெரிகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே இதுகுறித்து ஆய்வு செய்யவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். நாட்டில் எவ்வளவு கடைகள் பூட்டப்பட்டுள்ளது, எத்தனை ஆயிரம் சில்லரை வியாபாரிகள் காணாமல் போயிருக்கிறார்கள் என்ற தகவலை வெள்ளை அறிக்கையாக தரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், உள்நாட்டு வணிகத்தை சீரழிப்பதற்கு வெளிநாட்டு வணிக நிறுவனங்களான வால்மார்ட், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களை தடுப்பதற்கும் வெகு விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து சட்டமன்றத்தில் தீர்மான நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
நாளை (அதாவது இன்று) அகமதபாத்தில் நடைபெற உள்ள அகில இந்திய வணிக சம்மேளன கூட்டத்தில் பங்கேற்று அதில் நாடு தழுவிய அளவில் உள்நாட்டு வணிகத்தை சீரழிக்கின்ற அயல்நாட்டு வணிகத்தை எவ்வாறு தடுப்பது, அதற்கான போரட்ட வடிவமைப்பை எவ்வாறு செயல்படுத்துவது? என்று ஆலோசிக்க இருக்கிறோம். அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்ககூடிய வாய்ப்பை உள்நாட்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதில்லை. குறிப்பாக சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி கொடுப்போம் என்று உறுதியளித்து அவர்களை வாழ வைத்து வருகிறார்கள். இங்குள்ள நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் எவ்வாறு கிடைக்கிறது. வங்கி கடன் வட்டி விகிதம் எவ்வாறு உயர்வாக கிடைக்கிறது என்பது எல்லாம் கணக்கிடாமல் உள்நாட்டு வணிகம் நலிந்து மெலிந்து காணப்படுகிறது. இதனால்தான் ஆயிரக்கணக்கான கடைகள் கண்ணுக்கு தெரியாமல் மூடப்பட்டு வருகிறது என்பதை அரசு உணரவேண்டும்.
துணிப்பைகளுக்கு வரிவிலக்கு வேண்டும்பிளாஸ்டிக் தடை என்பது அரசு முடிவெடுத்துள்ளது. அரசாங்கம் எதை முடிவெடுத்தாலும் அதை பயன்படுத்துகின்ற வணிகர்களை அழைத்து ஆலோசனை பெற்று முடிவெடுத்தால்தான் அது முழுமையாக வெற்றி பெறும். அவர்களே முடிவெடுத்த பிறகு ஜனவரி ஒன்று முதல் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்ற புள்ளி விவரங்களை கூட சரிவர தெரிவிக்கப்படவில்லை. முழுமையாக பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட உள்ளதா என்ற விவரம் கூட தெரிவிக்கப்படவில்லை. முழுமையாக பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டால் அதற்கு மாற்றுவழி என்ன? என்று தெரிவிக்கவேண்டும். சாக்கு பைகள் மற்றும் துணிப்பைகளுக்கு வரிவிலக்கு அளித்து வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லா சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற ஆணையம் அமைத்து தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. ஆனால் சாதாரண வணிகர்கள் கோவில் வாசலில் கடை வைத்திருப்பதை, நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி அகற்றி வருவதை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளின் வாடகையை உயர்த்துவதால் பொதுமக்கள்தான் அவதிப்படுகிறார்கள். போராட வேண்டிய காலங்களில் போராடிதான் ஆகவேண்டும். தூத்துக்குடியில் மூடிய நிறுவனத்தை விட மோசமான நிறுவனங்களும் உள்ளன. அதையும் முறைப்படுத்தவேண்டும். தொழிற்சாலைகளை மூடும்போது வணிகம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என்று அரசு கணக்கீட்டு செயல்படவேண்டும்.
இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.
பேட்டியின்போது வள்ளியூர் வியாபாரிகள் சங்க தலைவர் சின்னத்துரை, செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.