மாவட்ட செய்திகள்

வீட்டில் தயாரித்த போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து கூலித்தொழிலாளி 2 பேர் படுகாயம் + "||" + The worker injured exploded in the country's bombs

வீட்டில் தயாரித்த போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து கூலித்தொழிலாளி 2 பேர் படுகாயம்

வீட்டில் தயாரித்த போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து கூலித்தொழிலாளி 2 பேர் படுகாயம்
மதுரையில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து கூலித்தொழிலாளிகள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை,

மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதில் வீட்டின் பெரும்பாலான பகுதி சேதமடைந்தது. இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே முனுசாமி உள்பட 2 பேர் பலத்த காயங்களுடன் கிடந்தனர். உடனடியாக கீரைத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்குள்ள தீக்காயங்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் அவர்கள் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி தரப்பினருக்கும், அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்பினருக்கும் பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் இருதரப்பினரும் எதிர்தரப்பினரை மாறி மாறி கொலை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 4–ந்தேதி வி.கே.குருசாமி ஆதரவாளரான சுமைதூக்கும் தொழிலாளி வேல்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அவரை கொலை செய்த கும்பலை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாழைத்தோப்பு பகுதியில் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் முனுசாமி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து உள்ளனர். இந்த பணியில் முனுசாமியும், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த கூலித்தொழிலாளி நரசிம்மன் (38) ஆகியோர் நேற்று ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.

இதில் அவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். வீட்டின் பெரும்பாலான பகுதி சேதமடைந்துள்ளது. காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். அங்கிருந்து 5 நாட்டு வெடிகுண்டுகளும், குண்டுகள் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எதிர் தரப்பினரை பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் தான் நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் தயாரித்துள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.