குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் தந்தையை அடித்துக்கொன்ற விவசாயி கைது


குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் தந்தையை அடித்துக்கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 11 Jun 2018 5:00 AM IST (Updated: 11 Jun 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்து தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மேற்கு ராசாகவுண்டம்பாளையம் வடக்குத்தோட்டத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 65) விவசாயி. இவருடைய மனைவி தெய்வாத்தாள் (60). இவர்களுக்கு முருகேசன் (40) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.

முருகேசன் விவசாய வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சித்ராதேவி(38) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். முருகேசன் தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முருகேசனின் தந்தை அருணாசலம் மது குடித்து விட்டு வந்து அவரது மனைவி தெய்வாத்தாளிடம் தகராறு செய்துள்ளார். இதனை முருகேசன் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் தந்தை–மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தந்தையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அருணாசலம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் 63 வேலம்பாளையத்தில் உள்ள அருணாசலத்தின் தம்பி சுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்த அருணாசலத்தை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அருணாசலத்தை பரிசோதனை செய்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருணாசலத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக முருகேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story