‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்


‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 11 Jun 2018 4:15 AM IST (Updated: 11 Jun 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்க கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மருத்துவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி,

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவ மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கு திருச்சி புத்தூரில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு ஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் முத்துக்குமார் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் பங்கேற்ற மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

மருத்துவ மாணவர்கள் மேல்படிப்புக்கு தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேரும்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டு நிர்ணயித்த ரூ.13 லட்சம் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றனர். தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ இடங்களுக்கு கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.

‘நீட்’ தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது வரவேற்க கூடியது தான். ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதி ஒப்புதல் வழங்க கோரி தமிழக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

‘நீட்’ தேர்வு முறை இருக்கும் பட்சத்தில் தற்போதே மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க தொடங்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை ரூ.1,700 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

இந்திய மருத்துவ குழுவை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வந்துள்ளது. அந்த மசோதாவில் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் கிராமப்புறங்களில் ஓராண்டு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என கூறியுள்ளது. தனியார் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மட்டும் ஏன்? இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story