ராகுல் காந்தியுடன் பேசிய பின் எம்.பி.பட்டீல் எதிர்ப்பை கைவிட்டார் கர்நாடக அரசியலில் புயல் ஓய்ந்து அமைதி திரும்பியது
ராகுல் காந்தியை சந்தித்து பேசிய பிறகு எம்.பி.பட்டீல் எதிர்ப்பை கைவிட்டதால் கர்நாடக அரசியலில் புயல் ஓய்ந்து அமைதி திரும்பியுள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்திப்பால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
ராகுல் காந்தியை சந்தித்து பேசிய பிறகு எம்.பி.பட்டீல் எதிர்ப்பை கைவிட்டதால் கர்நாடக அரசியலில் புயல் ஓய்ந்து அமைதி திரும்பியுள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்திப்பால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூட்டணி ஆட்சிக்கு ஆபத்துகர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. புதிய மந்திரிகள் கடந்த 6–ந் தேதி பதவி ஏற்றனர். காங்கிரஸ் சார்பில் 15 பேர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். முன்பு சித்தராமையா மந்திரிசபையில் இடம் பெற்று இருந்த எம்.பி.பட்டீல் உள்பட முன்னணி தலைவர்கள் கைவிடப்பட்டனர். இதனால் எம்.பி,பட்டீல், எச்.கே.பட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இதனால் கர்நாடக கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை உண்டானது. கர்நாடக அரசியலில் ஒரு அசாதாரண சூழல் நிலவியது. இதனால் கவலையடைந்த காங்கிரஸ் மேலிடம் எம்.பி.பட்டீலை தொடர்பு கொண்டு உடனே டெல்லிக்கு வரும்படி கடந்த 8–ந் தேதி அழைப்பு விடுத்தது. அன்று மாலை டெல்லிக்கு சென்ற அவர், நேற்று முன்தினம் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். கட்சிக்கு எதிராக செயல்படுவதை உடனே கைவிடும்படி எம்.பி.பட்டீலுக்கு ராகுல் காந்தி கட்டளையிட்டார்.
எதிராக பேசுவதை...மேலும் மந்திரிசபை விரிவாக்கத்தின்போது மந்திரி பதவி வழங்குவதாக அவருக்கு ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய எம்.பி.பட்டீல் கட்சிக்கு எதிராக பேசுவதை நிறுத்தியுள்ளார். மேலும் தான் கட்சியை விட்டு விலகப்போவது இல்லை என்றும், அந்த பதவி வேண்டும், இந்த பதவி வேண்டும் என்று தான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.
நேற்று அவர் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அவரை சுதாகர் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். ராகுல் காந்தியை சந்தித்து பேசிய பிறகு எம்.பி.பட்டீல் தனது எதிர்ப்பை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
அதிக அதிகாரம் உள்ளதுராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது துணை முதல்–மந்திரி பதவியோ அல்லது மந்திரி பதவியோ அல்லது கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியோ தரவேண்டும் என்று அவரிடம் நான் கேட்கவில்லை. நான் கட்சிக்காக பாடுபட்டது பற்றியும், முன்பு மந்திரியாக இருந்தபோது செய்த பணிகள் குறித்தும், மாநிலத்தில் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் எனது உணர்வுகளை அவரிடம் எடுத்துக் கூறினேன்.
நான் என்ன பேசினேன் என்பது எனக்கும், ராகுல் காந்திக்கும் இடையேயானது. நான் 2–ம் தர குடிமகன் இல்லை என்று நான் ஏற்கனவே உங்களிடம் கூறி இருக்கிறேன். நான் எம்.எல்.ஏ.வாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. காங்கிரஸ் கட்சி என்னை எம்.எல்.ஏ.வாக ஆக்கியுள்ளது. இதற்கு மற்ற பதவிகளை விட அதிக அதிகாரம் உள்ளது.
இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.
அமைதி நிலை திரும்பியதுஇதற்கிடையே எம்.பி.பட்டீலை பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் பா.ஜனதாவை சேர்ந்த சிவராஜ் பட்டீல் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் சிவராஜ் பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “இது அரசியல் சந்திப்பு கிடையாது. நாங்கள் இருவரும் நண்பர்கள். அதன் அடிப்படையில் எம்.பி.பட்டீலை சந்தித்து பேசினேன். அவருடன் அரசியல் பற்றி விவாதிக்க நான் மிகவும் சிறிய நபர். இது இணக்கமான, தோழமை அடிப்படையிலான சந்திப்பு“ என்றார். எம்.பி.பட்டீலை பா.ஜனதா எம்.எல்.ஏ. சந்தித்து பேசியது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பி.பட்டீல் அமைதி நிலைக்கு திரும்பிவிட்டதால், கர்நாடக அரசியலில் நீடித்து வந்த புயல் ஓய்ந்து அமைதி நிலை திரும்பியுள்ளது. ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியதால் முதல்–மந்திரி குமாரசாமி நிம்மதி அடைந்துள்ளது. இன்று(திங்கட்கிழமை) முதல் புதிய மந்திரிகள் தங்களின் பணியை தொடங்குகிறார்கள்.