கோவில் விழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் அபாயம் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


கோவில் விழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் அபாயம் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 4:30 AM IST (Updated: 11 Jun 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே, கோவில் விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த லளிகம் ஊராட்சியில் உள்ள ராஜவீதியில் ஒரு தரப்பினருக்கு சொந்தமான எருக்கம்மாள்-சக்கரம்மாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு முன்பு மற்றொரு தரப்பை சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான வீட்டுமனை நிலம் 3 சென்ட் உள்ளது. தற்போது இந்த கோவிலின் திருவிழா வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளதால், கோவிலுக்கு முன்புறம் உள்ள நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் திருவிழா கொண்டாட வழிவகை செய்யவேண்டும் என நல்லம்பள்ளி தாசில்தார் மற்றும் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு கோவில் தரப்பினர் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக வருவாய்த் துறையினர் கோவிலுக்கு முன்புறம் உள்ள வீட்டுமனை நில ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றுவதாக வந்த தகவலை தொடர்ந்து, கோவிலுக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஒரு தரப்பினர் திரண்டதால் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

இதுகுறித்து ஒருதரப்பினர் கூறியதாவது:- இந்த கோவிலுக்கு முன்புள்ள வீட்டுமனை நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதாக வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் யாரும் எங்களிடம் பேச்சு வார்த்தைகூட நடத்தவில்லை.

இதற்கிடையில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துவதோடு, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக இருக்கிறது. இத்தகைய செயல் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி எந்த தீர்ப்பு வந்தாலும், அந்த தீர்ப்புப்படி வருவாய்த் துறையினர் தங்களது செயல்பாடுகளை செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மற்றொரு தரப்பினர் கூறும்போது, 20 ஆண்டுகளுக்கு பிறகு 16 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, எருக்கம்மாள்-சக்கரம்மாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, தலைமீது தேங்காய் உடைத்து சாமிக்கு நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு கூடுவதால், கோவிலுக்கு முன்புற ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்த முடியும். இல்லாவிடில் சாமி திருவீதி உலா நடத்த முடியாமல் போய்விடும். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி திருவிழா நடத்த உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் மதியம் 1 மணியளவில் கோவில் முன்பு கூடியிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினரும் அங்கு ஒன்று கூடியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. இதனால் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. போலீசாரும் கண்காணிப்பில் மட்டுமே ஏற்பட்டனர்.

ஒரு தரப்பை சேர்ந்தவர்களும் கலையாமல் இருந்து வந்ததால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதையடுத்து சுமார் 3 நேரத்திற்கு மேலாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அங்கிருந்து சென்றனர். இருந்தாலும் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story