நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்வு
நீர்ப்்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகமானதால் லோயர்கேம்பில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது
கூடலூர்,
தமிழக-கேரள எல்லையில் குமுளி அருகே உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 116.4 அடியாக இருந்த முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 1½ அடி உயர்ந்து நேற்று 118 அடியாக காணப்பட்டது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 438 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்பில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்து உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் குறைந்து விடுவதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படமாட்டாது. இதன் காரணமாக மின்உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போது மின்சார உற்பத்தி நடைபெறாது. ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும்போது மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும். ஒரு ஜெனரேட்டர் இயக்க 450 கன அடி தண்ணீர் தேவைப்படும். 42 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம்.
நேற்று முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடங்கி உள்ளது. தற்போது இரண்டு ஜெனரேட்டர்கள் மட்டும்் இயக்கப்பட்டது. இதன் மூலம் 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வைகை அணையின் நீர் மட்டம் 35.99 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையில் இருந்து மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கன அடி தண்ணீர்் திறந்து விடப்படுகிறது. அணையில் 666 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தேவதானப்பட்டி அருகில் உள்ள மஞ்சளாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 41.60 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 31 கன அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை. அணையில் 206.64 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 126.11 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு 3 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து அதே அளவு வினாடிக்கு 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 99.94 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நேற்று முன்தினம் முல்லைப்பெரியாறு அணையில் 88.4 மில்லி மீட்டர் மழையும் தேக்கடியில் 56 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story