காவலாளியை அரிவாளால் வெட்டி பணம்-செல்போன் பறிப்பு


காவலாளியை அரிவாளால் வெட்டி பணம்-செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2018 12:22 AM GMT (Updated: 11 Jun 2018 12:22 AM GMT)

திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 55). இவர், திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அவர், பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

திருவொற்றியூர்,

கிளாஸ் பேக்டரி அருகே சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் திடீரென கணேசனை வழி மறித்தனர். அவர்கள் கணேசனிடம் பணத்தை தருமாறு கேட்டு அரிவாளை காட்டி மிரட்டினர். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மர்மகும்பல் அரிவாளால் கணேசனை வெட்டினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

பள்ளி முன்பு இருந்தே அந்த மர்மகும்பல் கணேசனை பின்தொடர்ந்து வந்து பணம்-செல்போனை பறித்துச்சென்றது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இது குறித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டை சத்யா நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(24). ஆம்னி பஸ் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்த விலை உயர்ந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை பறித்துச்சென்று விட்டனர். இதுபற்றி மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story