தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை


தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 11 Jun 2018 6:34 AM IST (Updated: 11 Jun 2018 6:34 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அழகாபுரத்தில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்,

சேலம் அழகாபுரத்தில் உள்ள பிருந்தாவன் ரோட்டில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 4 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 12 வீடுகள் உள்ளன. குடியிருப்பின் முதல் தளத்தில் சண்முகசுந்தரம் (வயது 59) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சிமெண்டு நிறுவனத்தின் சேலம் மாவட்ட டீலராக உள்ளார். இவருடைய மனைவி ஜோதிலட்சுமி. இவர்களுடைய மகள்கள் மீனாட்சி தேவி, ஹேமா ஸ்ரீ. 2 பேரும் சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சண்முகசுந்தரம் தனது மனைவியுடன் ஈரோட்டில் உள்ள உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். நேற்று மாலை வீட்டை சுத்தம் செய்வதற்காக அங்கு வேலை பார்க்கும் பெண் ஒருவர் வந்தார். அவர் சண்முகசுந்தரத்தின் வீட்டின் பூட்டை திறக்க முயன்றார். அப்போது பூட்டை திறக்க முடியவில்லை.

இதையடுத்து தான் அந்த வீட்டின் கதவு வேறு ஒரு புதிய பூட்டால் பூட்டப்பட்டு இருப்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண் குடியிருப்பின் காவலாளியிடம் தெரிவித்தார். இதை அவர் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனிடையே மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுப்புலட்சுமியும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அந்த வீட்டின் பூட்டை உடைத்து விட்டு, வேறு ஒரு புதிய பூட்டு போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதனை உடைத்து விட்டு, போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது. அங்கு இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்ததுடன், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. இதன்பின்னர் தான் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதும், மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் மர்ம ஆசாமிகள் வீட்டின் ஜன்னல் கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சண்முகசுந்தரம் ஈரோட்டில் இருந்து வீட்டிற்கு வந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 100 பவுன் நகை மற்றும் பணத்தை வைத்து இருந்ததாகவும், அவை கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். கொள்ளை நடத்த வீட்டிற்கு மோப்பநாய் மேகா வரவழைக்கப்பட்டது. பின்னர் மோப்ப நாய் வீட்டின் உள்ளே சென்று மோப்பம் பிடித்து விட்டு ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம ஆசாமிகளின் கைரேகைகள் இருந்த வீட்டின் கதவு, பீரோ உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்டன. இது தொடர்பான புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சண்முகசுந்தரம் வீட்டில் ஒரு நாள் மட்டும் தான் வெளியே சென்று உள்ளார். குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்படவில்லை. இதை அறிந்த நபர் யாரேனும் மர்ம ஆசாமிகளுக்கு தகவல் தெரிவித்து இருக்க வாய்ப்பு உள்ளது. அதன் பேரில் மர்ம ஆசாமிகள் அங்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சேலத்தில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story