அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சிலைகளின் நீளம், அகலம் கணக்கெடுக்கும் பணி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சிலைகளின் நீளம், அகலம் கணக்கெடுக்கும் பணி இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணை ஆணையராக ஞானசேகரன் பொறுப்பேற்றார்.
புதிய இணை ஆணையர் பொறுப்பேற்ற பிறகு கோவிலில் உள்ள அனைத்து ஆவணங்கள், கோவிலுக்கு சொந்தமான நகைகள், சிலைகள் குறித்த குறிப்பேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம்.
அதன்படி நேற்று இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் சென்னையை சேர்ந்த தொல்லியியல் துறை அலுவலர் சேகர் முன்னிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சிலைகள் நீளம், அகலம் மற்றும் எடை ஆகியவை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
புதிதாக இணை ஆணையர் பொறுப்பேற்ற பிறகு கோவிலில் உள்ள சிலைகளின் நீளம், அகலம் குறித்து பார்வையிடுவது வழக்கம். இதில் கூடுதலாக சிலைகளின் எடை பார்க்கப்பட உள்ளது. இதன் மூலம் சிலைகள் மாற்றப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்கப்படலாம்.
இன்று (செவ்வாய்க்கிழமை) சோமாசிபாடி முருகன் கோவில், சின்னக்கடை தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள அடி அண்ணாமலை கோவிலிலும் சிலைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. கோவிலுக்கு சொந்தமான 152 சிலைகள் கணக்கெடுக்கப்படுகிறது. கோவிலில் சில இடங்களில் உள்ள பழைய பூட்டுகள் மாற்றப்பட்டு புதிய பூட்டுகள் போடப்படுகிறது. மேலும் கோவில்களில் சிலை பாதுகாப்பிற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story